குளச்சல் துறைமுகத்தில் கடலில் பாய்ந்த மினி டெம்போ-டிரைவர் உயிர் தப்பினார்

குளச்சல் :  குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் மீன் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மினிடெம்போ கடலில் கவிழ்ந்தது. டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். குளச்சல்  பகுதியை சேர்ந்தவர் பாபின். இவர் சொந்தமாக மினிடெம்போ  வைத்துள்ளார். இந்த வாகனத்தை  மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர்  ரெஜி ஓட்டி வருகிறார். நேற்று காலை டிரைவர் ரெஜி குளச்சல் மீன்பிடி  துறைமுகத்தில் விசைப்படகுகளில் இருந்து மீன்களை இறக்கி வாகனம் மூலம்  ஏலக்கூடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டார். வாகனத்தில்  மீன்களை ஏற்றி கொண்டு ஏலக்கூடத்திற்கு சென்ற மினி டெம்போ எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்து கடல் பகுதியை நோக்கி உருண்டு ஓடியது.

 இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரெஜி வாகனத்தில் இருந்து வெளியே  குதித்தார். மினிடெம்போ வேகமாக பாய்ந்து கடலில் விழுந்தது. கீழே குதித்ததால் டிரைவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். மீன் பாரத்துடன் கடலில் விழுந்த மினிடெம்போ முழுவதுமாக கடலில் மூழ்கியது. இதனையடுத்து அந்த வாகனம் மீனவர்கள் உதவியுடன்  கயிறு கட்டி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் குளச்சல்  மீன்பிடி துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: