பரமக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் குண்டு மிளகாய்-சிண்டிகேட்டால் விலை இழப்பு

பரமக்குடி : நடப்பு 2021-22ம் ஆண்டு இந்தியாவின் காய்ந்த மிளகாய் உற்பத்தி 19 லட்சம் டன் ஆகும். இது இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கும் தாய்லாந்து மற்றும் சீன நாடுகளை விட ஐந்து மடங்கு அதிகம். இந்தியாவில் 8.36 லட்சம் டன் உற்பத்தி செய்து, ஆந்திரம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தின் உற்பத்தி 28,468 டன்கள் மட்டுமே. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மிளகாய் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. தமிழகத்தின் மிளகாய் விளையும் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு (தமிழகத்தில் 54,231 ஹெக்டேர் நிலப்பரப்பில் மிளகாய் விளைகிறது. ராமநாதபுரத்தில் 15,939 ஹெக்டேர்) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர்,கடலாடி, சாயல்குடி, ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகாவிலும், நெல்லுக்கு அடுத்தபடியாக குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் குண்டு மிளகாய் அதிக காரம் உள்ளதால், தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஆண்டு போதுமான விளைச்சல் இல்லாததால், தற்போது குண்டு மிளகாய் வத்தல், வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும்,மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், குவைத், துபாய் இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

பரமக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்படும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தால் புவிசார் குறியீடு வழங்குவதற்கான குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் அறிக்கை பெற்று, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. புவிசார் குறியீடு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடிக்குளம் ஆறுமுகம் கூறுகையில்,ருசி, காரத்தன்மை மிகுந்த குண்டு மிளகாய் நிறமும் அடர் சிவப்பாக இருக்கும். மருத்துவ குணமுடையது. குண்டு மிளகாய் எண்ணெய்க்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.உலகமே போற்றும் வகையில் உள்ள கொண்டு மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு போதிய விலை இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிளகாயை சேமித்து வைத்து, மதிப்புக் கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சிவகங்கையில், ஒன்றிய அரசு சார்பில் நறுமண பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நேரடி கொள்முதல் வேண்டும்

வியாபாரிகள் ‘சிண்டிகேட்’ அமைத்து விலை நிர்ணயம் செய்து வருவதால், விலை வீழ்ச்சி அடைந்து, ஒரு குவிண்டால் ரூ. 25ஆயிரம் விலை போகிறது. இதனால் குவிண்டாலுக்கு ரூ.10ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மிளகாய் வத்தலை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

Related Stories: