நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பார்வை குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்காக ‘டாக் டைல்ஸ்’ பிரத்யேக நடைபாதை

நெல்லை : பார்வை குறைந்த மாற்றுத் திறனாளிகள் அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லும் வகையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ‘டாக் டைல்ஸ்’ என்னும் பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசு கட்டிடங்களிலும் இந்த அமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது இந்தப் பணி முழுமை அடைந்துள்ளது. இதுபோன்று அரசு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பார்வை குறைந்த மாற்றுத் திறனாளிகள் அலுவலகங்களுக்கு வந்து செல்ல வசதியாக டாக் டைல்ஸ் எனப்படும் ஸ்டிக்கர் புதிதாக கட்டப்படும் அரசு அலுவலகங்களில் ஒட்ட அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்த டாக் டைல்ஸ் எனப்படும் பிரத்யேக நடைபாதை ஸ்டிக்கர் பார்வை குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்காக ஒட்டப்பட்டுள்ளது. நெல்லை கலெக்டர் அலுவலகம் தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் இயங்குகிறது. இதில் முதல் தளத்தில் கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கலெக்டர் அலுவலக மேலாளர் ஆகியோரின் அறைகள் உள்ளன. தரை தளத்தில் இருந்து 3 தளங்களுக்கும் செல்ல லிப்ட் வசதி உள்ளது.

இந்நிலையில் பார்வை குறைந்த மாற்றுத் திறனாளிகள் கலெக்டரை சந்திக்க வரும் போது பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். எனவே அவர்கள் தொடு திறன், உணரும் திறன் மூலம் லிப்டிற்கு சென்று அங்கிருந்து கலெக்டர் அறை வரை செல்லும் வகையில் ‘டாக் டைல்ஸ்’ எனப்படும் பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக நடைபாதையை நடந்து வருவதன் மூலமும், தொடு உணர்வு குச்சி மூலமும் உணர்ந்து மாற்றுத் திறனாளிகள் கலெக்டரை சந்திக்க ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும் டாக் டைல்ஸ் என்ற ஸ்டிக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்காகவும் பாளையங்கோட்டையில் தனி கட்டிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் பார்வை குறைந்த மாற்றுத் திறனாளிகள் வந்து செல்வதற்காக ஏற்கெனவே ‘டாக் டைல்ஸ்’ என்ற பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதே வசதியை கலெக்டர் அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திலும் ஏற்படுத்த கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி டாக்டைல்ஸ் பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தனியார் கட்டிடங்களிலும் இந்த வசதியை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வலியுறுத்திய அமர் சேவா சங்கம்; செயல்படுத்திய கலெக்டர்

நெல்லையில் கடந்த 20ம் தேதி மாநில கல்விக் கொள்கை தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கல்வியாளர்கள், மாணவ, மாணவிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் மாநில கல்விக் கொள்கை குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான முருகேசன் தலைமையில் நெல்லை கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய, அமர் சேவா சங்கம் ராமகிருஷ்ணன், பார்வை குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி அலுவலகங்களில் ‘டாக் டைல்ஸ்’ வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் ஒரு வாரத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: