×

திருவாரூரில் கனமழை 25,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது-விவசாயிகள் வேதனை

திருவாரூர் : திருவாரூரில் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.தென்மேற்கு பருவமழை வரும் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 26ம் தேதி நள்ளிரவு முதல் நேற்றுமுன்தினம் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையும் மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. திருவாரூர், நன்னிலம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் 25ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் மழைநீர் மூழ்கியுள்ளது.

இதனால் விவசாயிகள் கவலையில் இருப்பதோடு, வேளாண்மைத்துறையினர் பயிர் சேதங்களை கணக்கிட்டு நிவாரண வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திட்டச்சேரி, திருமருகல் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதியில் நேற்று காலை 6 மணி முதல் சாரல் மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 2 மணி நேரமாக நீடித்தது. மாவட்டத்தின் பல பகுதியில் லேசான மழை பெய்தது. கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நேற்று காலை வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: டெல்டா மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கீடு செய்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். கடந்த ஆண்டு சம்பா பயிருக்கு இதுவரையில் இழப்பீடு கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் என்றார்.

Tags : Thiruvarur , Tiruvarur: Farmers are in agony as 25 thousand acres of small paddy crops were submerged in water due to heavy rains in Tiruvarur.
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்