15 நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாடி வதங்கும் பருத்தி, மக்காச்சோளப் பயிர்கள்-விவசாயிகள் கவலை

கோவில்பட்டி :  தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்திற்கு விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது பண்படுத்தி இயற்கை உரமிட்டும், ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை போட்டும், கோடையில் அவ்வப்போது மழை பெய்ததால் ரொட்டேவேட்டர், சட்டிக்கலப்பை, பல்கலப்பையால் பலமுறை உழவு செய்தனர். எந்தாண்டும் இல்லாத வகையில் நிலங்களில் களைகள் அதிகம் முளைத்து விட்டதால் பல முறை உழவு செய்து கூடுதல் செலவும் ஏற்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் புரட்டாசி மாதமும் மழை தொடரும் எனக் கருதி ஆவணி மாத 2ம் வாரம் பெய்த தொடர்மழைக்கு பருத்தி, மக்காச்சோளம் விதைகளை நிலங்களில் அடி உரம் டிஏபி இட்டு ஊன்றினர். ஈரப்பதத்திற்கு விதைகள் முளைத்து ஓரளவு வளர்ந்து உள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கோடை காலம்போல் வெயில் சுட்டெரித்து வருவதால் மண்ணில் ஈரப்பதமின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் பயிர்கள் வாடி வதங்கி வருகின்றன. கடந்த 4 மாத காலமாக அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் மழை பெய்து வந்தது. இதனால் புரட்டாசி மாதம் 10ம் தேதி மகாளய அமாவாசையையொட்டி மழை பெய்து பயிர்களுக்கு வேண்டிய ஈரப்பதம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். சில கிராமங்களில் அமாவாசை மழையை எதிர்பார்த்து பெரும்பாலான விவசாயிகள் பிற பயிர் வித்துக்களையும் விதைத்து விட்டனர்.

ஆனால் மழை பெய்யாததால் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர். ஏற்கனவே இருந்த நகைகளை அடகு வைத்து விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளதால் தற்போது காசு கொடுத்து தண்ணீர் வாங்கவும் வழியில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கடந்த 2020-21ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடும் அதிகாரிகள் சொன்னபடி கிடைக்கவில்லை. கடந்தாண்டை போல் பிந்தைய தேதிகளில் மழை பெய்து இந்தாண்டும் அந்நிலை ஏற்பட்டு விடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு கருணைகொண்டு இயற்கை இடர்பாட்டால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உதவ விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: