×

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரான ஊட்டி மலை அதிவேக டீசல் என்ஜின்-தெற்கு பொது மேலாளர் துவக்கி வைத்தார்

திருச்சி : திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரான ஊட்டி மலை அதிவேக டீசல் என்ஜினை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட 66வது டீசல் (லோகோ) என்ஜின் மற்றும் நீலகிரி ஊட்டிமலை ரயில் இன்ஜின்களை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் மல்லையா செய்தியாளர்களிடம் கூறுகையில், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. பொன்மலை பணிமனை 100 வருட வரலாற்று சிறப்பு பெற்றுள்ள நிலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

அந்த வகையில் அதிவேக டீசலால் இயக்கப்படும் ஊட்டி மலை ரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினை, உருவாக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வந்தே பாரத் திட்டம் தமிழகத்திற்கு வர கொஞ்சம் காலம் ஆகும். அவற்றுக்கு பயன்படும் சில ரயில் பெட்டிகள் தொகுப்பு (ரேக்ஸ்கள்) நடப்பு நிதியாண்டில் வந்து சேரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் பாரத் கவுரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ரயில்கள் இயங்குகின்றன.மேலும் கூடுதலாக ஒரு ரயில் இந்த மாதத்திலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில்,3 ரயில்களும் இயக்கப்படும். இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, பணிமனை முதன்மை பொதுமேலாளர் ஷியாம்தார் ராம், துணைப் பொதுமேலாளர் கணேஷ் மற்றும் ரயில்வே பணிமனை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


ரூ.9.30 கோடி மதிப்பில் 7 மாதங்களில் ஊட்டி மலை ரயில் என்ஜின் உருவாக்கம்

ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில் திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே ஊட்டி மலையில் 4 என்ஜின்கள் இயங்கி வருகின்றது. அவை நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை ஆன் செய்யும் போது ஏதாவது எண்ணெயில்தான் ஆன் செய்யவேண்டும். இதற்காக உலை ஆயில் (ஃபர்னஸ் ஆயில்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜினை ஆன் செய்யும் போது, அதிகளவில் புகை எழும்பும். இதனால் உலை ஆயிலுக்கு மாற்றாக அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின் தயாராகியுள்ளது.

இதில், என்ஜினை ஆன் செய்ய பயன்படுத்தும் அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளவுள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி உருவாக்க கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் நிரப்பி வைக்க 4,500 லிட்டர் கொள்ளவுள்ள 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், அதேபோல என்ஜினின் உள்பகுதியிலும் எல்இடி பல்புகளும் உள்ளது.

இந்த சிறப்பு ரயில் என்ஜின் ரூ. 9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப்ரவரி துவங்கி 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனர். இந்த என்ஜின்இயக்கத்துக்கு பின்னர் இதில் காணப்படும் நிறை குறைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ரயில் என்ஜின்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இதே பணிமனையில் புனரமைப்பு செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றைக்கொண்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்படவுள்ளது.



Tags : General Manager ,Feedi Mountain ,Trichy PonMalai Railway Workplace , Trichy: Southern Railway General Manager Mallya yesterday inaugurated the Ooty Hill High Speed Diesel Engine which was prepared at Trichy Ponmalai Railway Workshop.
× RELATED கரூரில் போக்குவரத்து கழக நிர்வாகிகள் வாயிற் விளக்க கூட்டம்