×

2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி : 2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அலங்கார ஊர்தி மாதிரிகளை செப்.30-க்குள் அனுப்ப தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி வழக்கமான நடைமுறைகளின்படி முப்படைகளின் அணிவகுப்பு, துணை ராணுவ படைகள், டெல்லி காவல்துறை ஆகியவற்றுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அலங்கார அணிவகுப்பு இடம்பெறும்.

இந்த விழாவில் பங்கு கொள்வதற்காக, ஒன்றிய அரசின் முக்கியமான துறை மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு பல விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பிறகு அவை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் குடியரசு தின கொண்டாட்டங்களை கவனிக்கும் அதிகாரிகளைக் கொண்ட குழுவின் மூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அந்த விண்ணப்பத்தில் ஊர்திகளில் பயன்படுத்தப்படவுள்ள தீம், கலை வடிவம், கலாசாரம், வண்ணப்படங்கள் , இசை, வடிவமைப்பு, நடன அமைப்பு, ஊர்திகளின் அம்சம், presentation, பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் விவரம் அமையும். அவற்றை அடிப்படையாகக் கொண்டே அவை தேர்ந்தெடுக்கப்படும். இந்த தேர்வுப் பணிக்கென பல கட்டங்களில் போட்டிகள் இருக்கும்.

அந்தவகையில் மூன்று முறைக்கும் மேல் சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் துறைகளின் அதிகாரிகளை நிபுணர்குழு குழுவாக சந்தித்து பேசும். அவற்றின் அடிப்படையிலேயே பட்டியல் இறுதி செய்யப்படும். அதைத் தொடர்ந்து அணிவகுப்பில் இடம்பெற இறுதி செய்யப்பட்டுள்ள மாநிலங்கள் யாவும், மத்திய அமைச்சக துறை மற்றும் மாநில அரசின் அதிகாரிகள் மத்திய பாதுகாப்புத் துறை கொடுக்கக்கூடிய இடத்தில் தங்களின் வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.

மத்திய அரசின் துறைகளைப் பொருத்தவரை அவர்கள் செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்கள் குறித்தோ அல்லது அவர்கள் செயல்படுத்துவதன் மூலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விளக்கும் வகையில் தங்களது அலங்கார ஊர்திகளை வடிவமைத்து இருப்பார்கள். மாநில அரசுகளை பொருத்தவரை தங்களது கலாசாரம் பண்பாடு மற்றும் அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான வடிவமைப்புகளை அலங்கார ஊர்திகளில் செய்திருப்பார்கள்.

இந்த அணிவகுப்பு வாகனங்களில் பங்குபெறும் ஒன்றிய அரசின் துறைகள் மற்றும் மாநில அரசின் ஊர்திகளுக்கு சிறந்தவை எவை என்ற அடிப்படையில், 3 பரிசுகள் வழங்கப்படும். கடந்த 2000-ம் ஆண்டிற்கு முன்பு வரை ஒரு பரிசு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு பிறகுதான் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Union Government ,Republic Day , Republic Day Celebration, Decoration Car, Union Govt Order
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...