கள்ளிக்குடி அருகே விளைநிலங்களில் கொட்டப்படுவது கேரள மருத்துவக்கழிவுகளா? போலீசாரின் கண்காணிப்பு அவசியம்

திருமங்கலம் : கள்ளிக்குடி அருகே விளைநிலங்களில் கேரள மாநில மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ளது கல்லணை கிராமம். இந்த கிராமத்தில் விளைநிலங்கள் அதிகளவில் உள்ளன. விவசாயிகள் நெல், பருத்தி கம்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிாிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இரவு வேளையில் விளைநிலங்கள் மற்றும் கண்மாய் கரையில் கேரளாவிலிருந்து மருத்துவக்கழிவுகள் மற்றும் டயர் கழிவுகளை சிலர் ரகசியமாக வந்து கொட்டி செல்வாக கூறப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொட்டப்படும் கழிவுகளை தீ வைத்தும் சென்று விடுகின்றனர்.

நச்சு கழிவுகளுடன் தீ தொடர்ந்து எரிவதால் கல்லணை கிராமமக்கள் சுவாச பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தவித்து வருகின்றனர். கடந்த சிலதினங்களாக கொட்டப்படும் கழிவுகள் தொடர்ந்து எரிவது குறித்து பொதுமக்கள் கல்லணை ஊராட்சியில் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர்லாரியில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு பற்றி எரிந்த மருத்துவக்கழிவுகள் மற்றும் டயர் கழிவுகளில் உள்ள தீயை அணைத்தனர். இப்பகுதியில் மருத்துவக்கழிவு உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவோரை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்லணை ஊராட்சி தலைவர் முத்துஇருளாயி இருளப்பன் கூறுகையில், ‘‘மருத்துவக்கழிவுகள் மற்றும் டயர் கழிவுகளை கொண்டு வந்து கண்மாய் மற்றும் விளைநிலங்களில் கொட்டக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளோம். தொடர்ந்து இது போல் சம்பவம் நடந்தால் இது குறித்து போலீசில் புகார் தர உள்ளோம், மாசு கட்டுபாட்டு வாரியத்திலும் தகவல் தர உள்ளோம்’’ என்றார்.

Related Stories: