வியாபாரிகள் வருகை குறைவால் சந்தையில் மாடு விற்பனை மந்தம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில்  நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு கேரள வியாபாரிகள் வருகை குறைந்து  விற்பனை மந்தமாக நடந்ததுடன், வர்த்தம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள்  தெரிவித்தனர். பொள்ளாச்சி மாட்டு சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள்  நடக்கிறது. வௌி  மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில்  இருந்தும் பசுமாடு, காளைமாடு, எருமை போன்றவை விற்பனைக்காக  கொண்டு வரப்படுகிறது. இதனை பெரும்பாலும் கேரள மாநில வியாபாரிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியினர் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். கடந்த 2 வாரமாக மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது.

அந்நேரத்தில் சுமார் 1,800 முதல் 2,300 வரையிலான மாடுகள் விற்பனைக்காக  கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், அந்நேரத்தில் மாடு விற்பனை விறுவிறுப்புடன்  நடைபெற்றதுடன்,  கூடுதல் விலைக்கு போனது. அதிகபட்சமாக ரூ.2 கோடிக்கு  வர்த்தகம் நடந்துள்ளது. நேற்று நடந்த சந்தைக்கு சுமார் 1,200க்கும்  குறைவான மாடுகள் கொண்டு வரப்பட்டன. சுற்றுவட்டார பகுதியிலிருந்து மாடு  வரத்து ஓரளவு இருந்தாலும், கேரள வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை  மந்தமாக காணப்பட்டது.

இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் கொண்டு வந்த மாடுகளை  குறைந்த விலைக்கு நிர்ணயம் செய்து விற்பனை செய்தனர். கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு காளை மாடு ரூ.38 ஆயிரம் வரை விற்பனையானது.  ஆனால் நேற்று ஒரு மாடு ரூ.30 ஆயிரம் முதல் 32 ஆயிரத்துக்கும், எருமை மாடு  ரூ.25 ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.28 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி  ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையில் என குறைந்த விலைக்கு போனது என்று  வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: