கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கூக்கால் அருவியை ரசிக்க அனுமதிக்க வேண்டும்-சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலை பகுதியை சேர்ந்தது கூக்கால் அருவிக்கு சென்று வர சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தடையை நீக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் என்றாலே பசுமை போர்த்திய அழகிய மலைத்தொடர்களும், காணும் இடமெல்லாம் குளுமைக்கு குறைவில்லாத காட்சிகளும் அனைவரின் மனதிலும் நிழலாடும். தொடர் விடுமுறையில் நெரிசலை தவிர்த்து, மேல்மலை கிராமங்களில் உள்ள பல்வேறு சுற்றுலா பகுதிகள், சமீப ஆண்டுகளாக பயணிகள் அதிகம் சென்று திரும்பும் இடமாக மாறியுள்ளது.

இதில் முக்கியமானது, பசுஞ்சோலை காடுகளுக்கு மத்தியில் கூக்கால் கிராமத்தின் வருவாய் நிலப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள தூத்தூர் அருவி. கடந்த 2019ம் ஆண்டில் இருந்து இந்த தூத்தூர் அருவி பிரபலம் அடைந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாறி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது, வட இந்தியாவில் இருந்தும், காண வந்து, அதனை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.துத்தூர் அருவியின் பிரம்மாண்டமும், அதன் முன்னர் நிற்கும் பொழுது வீசும் மூலிகைச்சாரலும், பயணிகளின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. அருவியின் பேரழகை சமூக ஊடகங்களில் சுற்றுலா பயணிகள் தாங்கள் கண்டு ரசித்ததை பதிவிட பதிவிட, கூக்கால் கிராமத்தின் சுற்றுலா வாழ்வாதாரம் வேகமெடுக்க துவங்கியுள்ளது.

இந்த கூக்கால் தூத்தூர் அருவிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்ல, கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வழிகாட்டிகளாக, குழு அமைத்து, அரசின் அனுமதியுடன் பதிவு செய்து உள்ளனர். அருவியை காண வரும் பயணிகளிடம், கட்டணம் பெற்று, இரண்டு ஆண்டுகளாக அருவிக்கு தொடர்ந்து அழைத்து சென்றுள்ளனர்.

அருவிக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு, தேவையான உணவுகளையும் வழங்க, கூக்கால் கிராமத்தில் பத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் உருவாகி, அவர்களின் உணவுத்தேவையையையும் பூர்த்தி செய்துள்ளனர்.

அவ்வப்பொழுது விவசாயம் பொய்த்து, நட்டமடைந்த சுமார் 100 விவசாய குடும்பங்களுக்கு மேல், ஓய்வு நேரத்தில் சுற்றுலா வழிகாட்டிகளாக மாறி, தங்களது வாழ்வாதரத்தை சுற்றுலாவில் இருந்து ஈடுகட்ட துவங்கினர்.இந்நிலையில் கூக்கால் கிராம ஏழை விவசாயிகள், கூலி வேலை பார்ப்பவர்கள், வேலையில்லா வாலிபர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்வில் தூத்தூர் அருவி விளக்கேற்றி வைத்து மகிழ்ச்சியில் திளைத்து இருந்த நிலையில், இடியாய் இறங்கியது ஆணைமலை புலிகள் காப்பக வனத்துறை அறிவிப்பு. மூன்று வருடங்களாக, அருவிக்கு செல்ல எந்த தடையும் விதிக்காத, ஆணைமலை புலிகள் காப்பக வனத்துறை, திடீரென்று, கடந்த ஜூலை மாத இறுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது.

இது குறித்து கூக்கால் கிராம மக்கள் புகார் அளித்தனர். பின்னர், வருவாய்த்துறையினரும் தூத்தூர் அருவிக்கு சென்று, அருவி உள்ள இடம், வருவாய் நிலம் என்று உறுதி செய்தனர். ஆனாலும் ஆணைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் இன்றளவும் அந்த அருவிக்கு பயணிகளை செல்லவிடாமல் தடை விதித்து உள்ளனர்.

அந்த அருவி அமைந்துள்ள இடம் வனப்பகுதியோ அல்லது வருவாய் பகுதியோ, அருவிக்கு பயணிகள் செல்ல வழிமுறைகளை முறையாக ஏற்படுத்தி, கூக்கால் கிராம மக்களின் சுற்றுலா வாழ்வாதாரம் மேம்படவும் அழகிய இந்த தூத்தூர் அருவியினை சுற்றுலாப் பயணிகள் தடையின்றி கண்டு ரசிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: