தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு-உலக சுற்றுலா தின பேரணியில் 500 பேர் பங்கேற்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற உலக சுற்றுலா தின பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 27 செப்டம்பர் உலக சுற்றுலா தினம், 16 செப்டம்பர் முதல் 30 செப்டம்பர் வரை தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்னாடா) 27ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா வாரம் ஆகியவற்றை கொண்டாடும் வகையில் தஞ்சாவூரில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து பெரிய கோயில் வளாகத்திலிருந்து அரண்மனை வளாகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய உணவு தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம், ஒரத்தநாடு கால்நடை கல்லூரி, ஈச்சங்கோட்டை விவசாய கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, பான் செகர்ஸ் மகளிர் கல்லூரி, கிங்ஸ் பொறியல் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி மற்றும் ஒரத்தநாடு அரசு பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் 500 பேர் பங்கேற்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை புரிந்த வெளிநாட்டு பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்து பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகம் கலைக்கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடைபயணம் மற்றும் கலாச்சார திருவிழா நடைபெற்றது.

இதி்ல் இந்திய சுற்றுலா தென் மண்டல இயக்குனர் முகமது ஃபாரூக், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தாசில்தார் மணிகண்டன், மாரியம்மன் கோவில் பிரபு மற்றும், சுலைச்செல்வி, இந்திய சுற்றுலா தகவல் அலுவலர் ராஜ்குமார், செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: