1.25 லட்சம் பேர் பசியை தீர்க்கும் அட்சயபாத்திரம் இரண்டாம் நெற்களஞ்சியத்தில் நெல் விளைச்சல் அமோகம்

*இன்று அறுவடை துவங்குகிறது

*கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னமனூர் : கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 1.25 லட்சம் பேர் பசியை தீர்க்கும் அட்சய பாத்திரமாக விளங்கும் இரண்டாம் நெற்களஞ்சியத்தில் இருபோக நெல் சாகுபடியால் விளைச்சல் அதிகரித்து அறுவடைக்கு தயாராக உள்ளது.தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு என்பது தமிழக கேரளா எல்லையான குமுளி மலை அடிவாரம் லோயர் கேம ப் துவங்கி கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி, பிசிபட்டி வரையில் தொடர்ந்து கூழையனூர், குச்சனூர், மார்க்கையன்கோட்டை, எல்லப்பட்டி, அம்மா பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையான் பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, என்.டி பட்டி, கேஜி பட்டி, கே.கே பட்டி, கம்பம் புதுப்பட்டி, உட்பட பல குக்கிராமங்களும் அடங்கிய பள்ளத்தாக்காக விளங்கி வருகிறது. இந்த கம்பம் பள்ளத்தாக்கில் இருக்கும் சுமார் 15,000 ஏக்கர் வயல் வெளிகளுக்கு முல்லைப் பெரியாற்றின் பாசனம் தான் மிகவும் சக்தி வாய்ந்த பிரதானமாகவும் விவசாயிகளுக்கு வாழ்வு அளிக்கும் அரணாக விளங்கி வருகிறது.

இப்பகுதி முழுவதும் தல விருட்சகமாக தொடர்ந்து நெல் முதல் வாழை, திராட்சை, செங்கரும்பு, ஆலை கரும்பு, காய்கறிகள், சோளம், கேழ்வரகு, நிலக்கடலை, தென்னை என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு விவசாயங்கள் செழித்து வருகின்றன. அதன் வரிசையில் ஜூன் முதல் தேதியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கு முல்லைப் பெரியாற்று தண்ணீர் திறக்கின்ற போது கம்பம் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள கண்மாய், மற்றும் குளங்களில் தேக்கப்படுகின்றன.

தொடர்ந்து 8 மாதம் நடக்கும் இருபோகங்களுக்கு இடையே தற்செயலாக ஏற்படும் பாசன பற்றாக்குறை தீர்ப்பதற்கும் பிற விவசாய பயிர்களுக்கு நிலத்தடி நீர் ஊற்றெடுப்பதற்கும் இந்த தண்ணீர் பெரிதும் பயன்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்கப்பட்ட பாசன நீரால் சின்னமனூர் பகுதியில் உள்ள நான்காயிரம் ஏக்கர் உட்பட கம்பம் பள்ளத்தாக்கிற்கு முதல் போக நெல் சாகுபடிக்கு 25 நாட்களில் வளர்க்கப்பட்ட ஜூன் இறுதியில் நடவுப்பணிகளை துவக்கி ஒரு மாதத்திற்கு மேலாக நிறைவு செய்யப்பட்டது.

நடவுப் பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து 120 நாட்களில் அறுவடை வரையில் விவசாயிகளின் தீராத உழைப்பால் நெல் நாற்றுகள் வளர துவங்கி பசுமையில் துவங்கி படிப்படியாக பயிர்கள் வளர்ந்து 90, 95 நாட்களைக் கடந்த பின்பு நெற் கதிர்களை சுமந்து செந்நிறமாக மாறி தங்கத்தின் நிறத்தை மிஞ்சம் அளவிற்கான தோற்றத்திற்கு வந்து நெற்கதிர்களை சுமந்து தலை சாய்த்து நிற்கும் போது சரியாக 120வது நாட்களில் அறுவடைக்கு தயாராக இருக்கிறது.

ஒரு ஏக்கரில் நெற்கதிர்களை தடையின்றி நோய் தாக்காமல் பாதுகாப்புடன் வளர்தெடுத்த 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை செலவு செய்து இயற்கையின் ஒத்துழைப்போடு விவசாயிகள் பலவித கஷ்டங்களை கடந்து விளைவித்து எடுக்கின்றனர்.இந்நிலையில் இன்று புதன்கிழமை முதற்கட்டமாக சின்னமனூர் வேம்படிக்களம் பகுதியில் முதல் போகத்திற்கான நெல் அறுவடை துவங்குகிறது. ஒரு ஏக்கருக்கு 60 கிலோ எடை கொண்ட 45 மூடைகள் முதல் 50 மூட்டைகள் வரை இந்த அறுவடையில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் முதல் நிலையில் இருக்கும் போது இரண்டாம் நெற்களஞ்சியமாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விளங்குகிறது.

ஒரு போகத்திற்கு கம்பம் பள்ளத்தாக்கில் 75 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி கிடைக்கும் அதுவே அரசிற்கு வழங்கபட்டு பொதுமக்களுக்கு நல்ல உணவாக சென்று சேருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தொழிலாளர்கள் உட்பட 1.25 லட்சம் பேர்கள் பயனடைந்து வருகின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த இரு போகங்கள் வரையிலும் தமிழக அரசு ஒவ்வொன்றுக்கும் மானியம் வழங்கியது.

நெல் நடவு முதல் அறுவடை வரையிலும் நெல் நுண்ணூட்டமும், உயிர் உரமும் மானியத்தில் வழங்குகிற போது உற்பத்தி செலவில் சற்று குறைவதால் பெரும் நஷ்டத்தில் இருந்து நாங்கள் தப்பித்து வருகிறோம். தொடர்ந்து அரசு நெல் விவசாயிகளுக்கு மானியம் கட்டாயம் வழங்கி அரசே நேரடி கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாழ்வழிக்க வேண்டுமென அரசிடம் வலியுறுத்துகின்றோம்’’ என்றனர்.

Related Stories: