மங்கத்தொடங்கிய சுண்ணாம்புச்சூளை தொழில்

பல்லடம் :  ஒரு காலத்தில் திருவிழா, திருமணம், புதுமனைபுகுவிழா உள்ளிட்ட விஷேச நாட்களில் சூளை சுண்ணாம்பின் வெண்மை உள்ளத்தை கொள்ளை கொள்ளும். கால வெள்ளோட்டத்தில் அதன் வெளிச்சம் மங்கத்தொடங்கி வெகு நாட்களாகிறது.தமிழர் திருநாளான பொங்கலுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் முதல் விருந்தினர் இந்த சண்ணாம்பு கற்கள் தான். அவகைளை தற்போது கைவிட்டு காட்சி பொருளாக கடந்து வந்துவிட்டோம்.

 பாரம்பரியமான இந்த குடிசைத்தொழில் நலிவடைந்து வருவது கவலை அளிக்கிறது. பொங்கல் பண்டிகை என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது வீட்டுக்கு வெள்ளை அடித்து தூய்மைப்படுத்தும் பணி தான். இதற்கான பணிகளை மார்கழி மாதத்திலேயே தொடங்கி விடுவர். வெள்ளை அடிக்க சுண்ணாம்புச் சூளைகளில் சுண்ணாம்புகல் வாங்கியது ஒரு காலம், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட சுண்ணாம்புச்சூளைகளில் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து சுண்ணாம்பு கல் வாங்க வேண்டியது இருந்தது.

பண்டிகை காலங்கள் என்றாலே அதற்கு கிராக்கி ஜாஸ்தி தான். பல்லடம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புச்சூளைகள் செயல்பட்டு வந்தன. ஆனால் இன்று இது தான் சுண்ணாம்புச்சூளை என்று இன்றைய தலைமுறையினருக்கு அடையாளம் காட்ட ஒரு சுண்ணாம்புச்சூளை கூட இல்லை. அனைத்தும் இடிக்கப்பட்டு விட்டது. சுண்ணாம்புச்சூளை என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே சுண்ணாம்புச்சூளைகள் பெயருக்கு இயங்கி வருகிறது. அதில் ஒன்று தான் பொங்கலூர் கோவில்பாளையம் சுண்ணாம்புச்சூளை. அதன் உரிமையாளர் திருப்பதி கூறுகையில்: முன்பு பொங்கல் பண்டிகை காலத்தில் தினசரி 1 டன் சுண்ணாம்புக்கல் விற்பனை ஆகும். ஆனால் இன்று ஒரு நாளைக்கு 30 சட்டி சுண்ணாம்புக்கல் கூட விற்பனை ஆவதில்லை. அனைவரும் நவீனமான ஒயிட் சிமெண்ட் பயன்படுத்த மாறிவிட்டனர். கையை ஓட்டையாக்கும் என்பதாலும் சுண்ணாம்புக்கல் மூலம் வெள்ளையடிக்க தொழிலாளர்களும் முன்வருவதில்லை.

கோழிப்பண்ணைகளுக்கு கிருமி நாசினியாக சுண்ணாம்பு துகள் மற்றும்  ஹாலோ பிளாக் கல் தயாரிக்கவும் சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது. சிமெண்டை விட சுண்ணாம்புக்கு அதிக சக்தி உள்ளது. சிமெண்ட் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே பெரிய வீடுகள் கட்ட கோழி முட்டை, சுண்ணாம்பு கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்பு பழைய கட்டிடங்களை இடித்தால் அதில் உள்ள ஓடை கற்களை இலவசமாக எடுத்து செல்ல கட்டிட உரிமையாளர்கள் கூறுவார்கள். ஆனால் இன்று கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் ஓடை கற்களை அஸ்திவாரத்திற்கு கருங்கற்களுடன் சேர்த்து அவர்களே பயன்படுத்தி கொள்கிறார்கள். இதனால் சுண்ணாம்பு தயாரிக்க மூலப்பொருளான ஓடை கற்கள் கிடைப்பது சிரமாகி வருகிறது.

அதனால் இரும்பு உருக்கு ஆலைகளில் பயன்படுத்தப்பட்டு கழிக்கப்படும் நிலக்கரியை வாங்கி வந்து சுண்ணாம்பு தயாரிக்க பயன்படுத்துகிறோம்.கடந்த ஆண்டு ஒரு டன் ரூ.2 ஆயிரமாக இருந்தது.

தற்போது ரூ.4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதே போல் சுண்ணாம்புச்சூளைகளில் வேலை செய்ய உள்ளூர் ஆட்கள் யாரும் முன்வருவதில்லை. வேலை கடினம், ஊதியம் குறைவு  என்பதே ஆகும்.

இதனால் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வேலை தேடி வருபவர்களை இத்தொழிலுக்கு அழைந்து வந்து அவர்களுக்கு தங்க இருப்பிடம் இலவசமாக வழங்கி தினசரி கூலியாக ரூ.500 வழங்கி வருகிறோம். சுண்ணாம்புக்கல் சூரியநல்லூர் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் எடுத்து வர வேண்டும் இதற்கு பர்மிட் உள்பட ரூ. 5 ஆயிரம் செலவு ஆகும். இந்த விலைக்கு வாங்கி வந்து தொடர்ந்து தொழில் செய்ய முடியாது.

அரசு குறைந்த விலையில் மூலப்பொருள் கிடைத்திட ஆவனம் செய்ய வேண்டும். அழிந்து வரும் சுண்ணம்புச்சூளை தொழிலை பாதுகாக்க வங்கி கடனுதவி, சலுகைகள் வழங்கி அரசு பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் இன்றைய எஞ்சி சுண்ணாம்புச்சூளைகள் வருங்கால தலைமுறைக்கு காட்சி பொருளாக மாறும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: