ஆதிச்சமங்கலம் கிராமத்தில் புழுதி உழவு செய்து நேரடி விதைப்பில் விவசாயிகள் தீவிரம்

வலங்கைமான் : டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பதினைந்து தினங்கள் மழை பெய்யாததைப் பயன்படுத்தி புழுதி உழவு செய்து நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி நேரடி விதைப்பு இயந்திரம் நடவு, கை நடவு ஆகிய முறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவு மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவு ஆகியவற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போக சாகுபடி முடிவுக்கு வந்து ஒரு போக சம்பா சாகுபடியை மிகுந்த போராட்டத்துடன் மேற்கொண்டனர். மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்டு முன்கூட்டியே மூடப்பட்ட நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து நீர்நிலைகளும் வற்றியது.

இதன் காரணமாக பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து கை நடவு முறையை கை விட்டு விட்டு நேரடி விதைப்பில் ஆர்வம் செலுத்தினர். டெல்டா மாவட்டங்களில் களைகளைக் கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாக இருந்ததையடுத்து நேரடி விதைப்பிற்கு உரிய முக்கியத்துவம் இல்லாத நிலையில் பாசன நீரின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு நேரடி விதைப்பு நிர்ப்பந்தத்தின் பேரிலேயே துவங்கினர். பின்னர் சம்பா சாகுபடி பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நேரடி விதைப்பு முக்கியத்துவம் பெற்றது.

நேரடி விதைப்பிலும் இரண்டு முறைகள் உள்ளன. புழுதி உழவு செய்து நெல் சாகுபடி முறை விவசாயிகளிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்று வருகின்றது. கால்வாயில் பாசனநீர் வருவதற்கு தாமதமானாலோ அல்லது போதுமான அளவு மழை கிடைக்காத தருணத்திலோ புழுதி நெல் விதைப்பினை மேற்கொள்ளலாம். இதில் வயலை தண்ணீர் இல்லாமலே புழுதி வயலாக உழுது தயார் செய்து, நெல்லை நேரடியாக விதைத்து பிறகு வாய்க்காலில் பாசனநீர் கிடைத்தவுடன் சேற்று நெல்லாக மாற்றி பராமரிப்பு செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நடவு வயல் தயாரிக்க (சேற்றுழவு செய்ய) தேவைப்படும் பாசனநீர் மிச்சமாகிவிடும். கிணற்று பாசனப் பகுதிகளில் பாசனநீர் பற்றாக்குறை இருந்தால் இந்த முறையைப் பின்பற்றி நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ளலாம். இருப்பினும் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து இதன் காரணமாக புழுதி உழவு செய்து நேரடி விதைப்பு செய்வது வாய்ப்பில்லாமல் போனது.

நேரடி புழுதி நெல் விதைப்பு முறை சாகுபடி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பாசன நீர் சிக்கனமாவது மட்டுமல்ல. நேரடி நெல் விதைப்பில் நாற்றங்கால் தயாரிப்பு செலவும் மிச்சமாகின்றது. நாற்றுப் பறித்தல் மற்றும் நடவு செலவும் இல்லை. நேரடி உழைப்பின் நேரடி விதைப்பில் இரண்டாவது முறையான சேற்று உழவு செய்து நேரடி விதைப்பு பரவலாக பல இடங்களில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 15 நாட்கள்மழை பெய்யவில்லை.அதை சாதகமாக பயன்படுத்திக் வலங்கைமான் பகுதியில் சில இடங்களில் புழுதி உழவு செய்து நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளாக புழுதி உழவு செய்து நேரடி விதைப்பு செய்து வரும் விவசாயி கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்யாமல் இருந்தது பயன்படுத்திக்கொண்டு புழுதி உழவு செய்து நேரடி விதைப்பு செய்துள்ளார். இருப்பினும் 80% சேற்று உழவு செய்தே நேரடி விதைப்பு செய்யப்படுகிறது.

Related Stories: