மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கேட்டு கூடலூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கூடலூர் :  கூடலூர் சட்டமன்ற தொகுதியில் நிலவும் நீண்டகால பொதுமக்கள் பிரச்னைக்கு தீர்வு காண கோரி கூடலூர் பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் கூடலூர் கட்டிட தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் காந்தி திடலில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   பில்டர்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தில் செயலாளர் சந்திரசேகர், துணைத் தலைவர் பஷீர் துணைச் செயலாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:  சூழல் உணர் திறன் மண்டல திட்டத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிவு 17  நிலங்களில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். கதவு எண் மின் இணைப்பு உள்ள வீடுகளை பராமரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். நகராட்சியில் தரவேண்டிய வீட்டு வரைபட அனுமதியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்புவதை நிறுத்தி கூடலூர் மற்றும் பந்தலூர் நகராட்சிகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு கால தாமதம் செய்யாமல் உடனடியாக கதவு எண் வழங்க வேண்டும். பழைய கட்டிடங்களை பராமரிப்பு பணிகள் செய்யும்போது கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்த டிப்பர் வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.  நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் பாலங்கள் மற்றும் நீர்தேக்கங்களை சீரமைக்க வேண்டும். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இரண்டு எக்டருக்கும் குறைவாக உள்ள பட்டா நிலங்களில் வீடு கட்ட அனுமதி வழங்குவதோடு, பழைய வீடுகளை பராமரிக்க அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 இதில் கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் சகாதேவன், சிபிஎம் கட்சி ஏரியா செயலாளர் மணி, நாம்தமிழர் கட்சி கேதீஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி சாதிக் பாபு உள்ளிட்ட பலர் பேசினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கூடலூர் ஆர்டிஓ சரவண கண்ணனிடம் அலுவலத்தில் வழங்கினர். ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏராளமான கட்டிட மற்றும் வண்ணம் பூசுவோர் சங்க தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

Related Stories: