ஏர்வாடியில் வாழைதோட்டங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்-விவசாயிகள் கவலை

ஏர்வாடி : ஏர்வாடியில் தோட்டங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் வாழைகளை நாசப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஏர்வாடியில் கைகாட்டியிலிருந்து கிழக்கே இரண்டாயிரம் ஏக்கரில் சுமார் 2லட்சம் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு நாடு, தொழுவன், ரசகதலி, கற்பூரவல்லி, சக்கை போன்ற வாழைகள் ஒவ்வொரு விவசாயிகளும் 5000 மற்றும் 10000 வாழைகள் பயிரிட்டுள்ளனர். சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நம்பியாறு மற்றும் வடமலையான் கால்வாயில் உள்ள புதர்களில் இருக்கும் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து வாழைகன்றுகளை துவம்சம் செய்து வருகின்றன.

தினமும் இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுபன்றிகள் 50க்கும் மேற்பட்ட வாழை குருத்துகளை தின்று சேதப்படுத்தியுள்ளன. இவைகள் 3 மற்றும் 4 மாதங்கள் ஆன வாழைகள் ஆகும். அயுப்கான், காடுவெட்டி பீர்முகம்மது, மரக்கடை சேக், பஞ்சிராஜன், இசக்கிமுத்து, பரமசிவன், விவசாயசங்க தலைவர் பஸீர், ராஜா, கணேசன் மற்றும் பல விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் தண்ணீர் பாய்ச்ச செல்லும் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து நிலவுவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.     

இது பற்றி முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆசாத் கூறுகையில், ‘ஏர்வாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தற்போது பல விவசாயிகள் சுமார் 2லட்சம் வாழைகள் பயிர் செய்துள்ளோம். சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.  நம்பியாறு மற்றும் வடமலையான் கால்வாயில் உள்ள புதர்களில் இருக்கும் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து வாழைகன்றுகளை  துவம்சம் செய்கின்றன.

 பலமுறை வனத்துறையினரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனது வயலில் தினமும் 50க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டுபன்றிகள் பிடுங்கி அழித்துவருகின்றன. என்னை போல பல விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். வாழைகள் முழுவதையும் காட்டுப் பன்றிகள் அழிப்பதற்குள் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிககள காட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.  மேலும் கடந்த வாரம் சேர்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷாப்பிடம் விவசாய சங்க தலைவர் பசீர் இதுபற்றி கோரிக்கை மனு கொடுத்துள்ளார். எனினும் வனத்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை காட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: