ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டவட்டம்..!!

சென்னை: ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சிகளின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என சுமார் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா தலைவர்களை தீவிரமாக கண்காணித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் கசிந்தன. பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இன்று காலை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்தட்ட 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களுக்குள் செல்ல போலீஸ் தடை விதித்துள்ளது. அலுவலகங்களுக்குள் யாரும் செல்லாத வகையில் போலீஸ் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளது. இந்நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பெயரில் செயல்பட்டு கொண்டிருந்த அனைத்து செயல்பாடுகளும் நிறுத்திக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோத, ஜனநாயக விரோதமான ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என அந்த அமைப்பின் தலைவர் முகம்மது சேக் அன்சாரி தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேட்டிகளோ அல்லது செய்தி அறிக்கையோ யார் வெளியிட்டாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: