சீல் வைத்த அதிகாரிக்கு மிரட்டல் எதிரொலி கோயம்பேடு காய்கறி அங்காடியில் விதிமீறும் கடைகளுக்கு நோட்டீஸ்: ஸ்ரீ ஆக்கிரமிப்புகளை அகற்ற 24 மணிநேரம் கெடு, ஸ்ரீ கண்காணிக்க குழு அமைத்து அதிரடி நடவடிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் சிலர் விதிமுறைகளை மீறி கடைகளை நடத்துவதாக அங்காடி முதன்மை அதிகாரிக்கு தொடந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில் அங்காடி குழுவினர் விதிமுறை மீறி செயல்பட்ட கடைக்கு சீல் வைத்தபோது சீலை உடைத்த கடை உரிமையாளர் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு அதிகாரி சாந்தி சென்று கேட்டபோது, கடை உரிமையாளரும், ஊழியரும் அவரை மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர். தொடர்ந்து அதிகாரிகளை மிரட்டுவது மட்டும் இல்லாமல் வாக்குவாதம் செய்து வருவதால் அங்காடி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி, அனைத்து கடை வியாபாரிகளுக்கும் அங்காடி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கினர்.

அதில், 24 மணி நேரத்தில் கடைக்கு வெளியே சாலையில் வியாபாரம் செய்பவர்களும், சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை நடத்துபவர்களும் அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி கூறியதாவது: கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகளில் கடைக்கு வெளியே சாலையில் வியாபாரம் செய்வதால வாகனம் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. குறிப்பாக, மார்க்கெட்டின் அருகே போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலை ஓரத்தில் காய்கறி கடைகள் போட்டிருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன.

வியாபாரிகளின் புகாரை தொடர்ந்து, கடைக்கு வெளியே வியாபாரம் செய்பவர்கள், சரக்கு வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்வது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை மீண்டும் பயன்படுத்துவது, இயற்கைக்கு மாறான முறைகளில் பழ வகைகளை பழுக்க வைத்தல், திடக்கழிவுகளை முறையாக சேமிக்காமல் சாலையில் வீசி செல்வது போன்றவற்றை கண்காணிக்க அங்காடி அதிகாரி அமுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடைக்கு வெளியே வியாபாரம் செய்பவர்களை கண்காணிக்கும்.

அப்படி வீதிமீறி கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அங்காடி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதை கடைபிடிக்காத கடை உரிமையாளரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். வியாபாரிகள் கூறும்போது, ‘‘கடைக்கு முன்வியாபாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரின்படி அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் அனைத்து கடை வியாபாரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கி 24 மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது’’ என்றனர்.

Related Stories: