பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் 4வது ஆலை பணி விறுவிறு: ஜனவரியில் கட்டுமானம் தொடங்குவதாக அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை குடிநீர் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை -தேர்வாய்கண்டிகை உள்ளன. இந்த ஏரிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை மாற்று வழிகள் மூலம் குடிநீர் வாரியம் சமாளிக்கும். இதற்காக, கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் வீராணம் ஏரி மற்றும் போரூர் அருகில் உள்ள கல்குவாரி தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 100 மில்லியன் லிட்டர் கடல்நீர், குடிநீராக மாற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் தென்சென்னை பகுதிகளான சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதேபோல் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

சென்னையில் ஏற்கனவே கடல்நீரை  குடிநீராக்கும் 2 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இதற்கிடையே நெம்மேலியில்  10.5 ஏக்கர் பரப்பளவில் தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி  செய்யும் ஆலையின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் 60 சதவீத பணிகள்  முடிவடைந்து விட்டன. கடலுக்குள் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2,250 மில்லி மீட்டர்  விட்டம் கொண்ட குழாய்களை பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழாய்  கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படுகிறது. 47.35 கி.மீ  தூரத்தில் 41 கி.மீ தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணியை குடிநீர்  வாரியம் முடித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் பேருக்கு  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை  பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து குடிநீர் வினியோகம்  தொடங்கும்.

இந்நிலையில், நெம்மேலி அருகே உள்ள பேரூரில்  நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும்  4வது ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தமிழக அரசிடம் அளித்தது. இந்த திட்டம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் 85 சதவீத நிதியுடனும், தமிழக அரசின் 15 சதவீத மானியத்துடனும் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.4 ஆயிரத்து 267 கோடியே 70 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. மீதமுள்ள ரூ.1,810.70 கோடி தமிழக அரசு வழங்குகிறது. இந்நிலையில், இத்திட்டத்துக்கான நிர்வாக ஒப்புதல் அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கட்டுமான பணிகள் ஜனவரியில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:   நெம்மேலியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேரூரில் இந்த ஆலை அமைகிறது. ஆலையின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக்கப்படும். இதற்கான திட்ட மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி. 200 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் 2 பிரிவாக இந்த ஆலை அமைக்கப்படுகிறது. பராமரிப்பு காலத்தில் கூட இந்த ஆலையில் இருந்து குறைந்தபட்சம் 200 மில்லியன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். ஆலையின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் உற்பத்தி விலை லிட்டருக்கு ரூ.32.52 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் 2026ம் ஆண்டு ஜூலை மாதம் குடிநீர் உற்பத்தி தொடங்கும் என்றனர்.

* ஏரிகள் வறட்சியானால் கடல் நீர் கைகொடுக்கும்

சென்னையை பொறுத்தவரை தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது மீஞ்சூர், நெம்மேலியில் இருந்து, 20 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. மீதமுள்ள குடிநீர், ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது. நெம்மேலி- 2 மற்றும் பேரூர் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, 75 கோடி லிட்டர் குடிநீர் கடலில் இருந்து கிடைக்கும்.

அப்போது, 75 சதவீதம் கடலை நம்பியும், 25 சதவீதம் ஏரியை நம்பியும் இருக்க வேண்டும். ஏரியில் அதிக கொள்ளளவு நீர் இருக்கும் போது, கடல் நீர் சுத்திகரிப்பின் அளவு குறையும். ஏரிகள் வறட்சியாகும் போது கடல் நீர் கைகொடுக்கும் வகையில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: