×

பங்கு சந்தை முதலீடு பண மோசடி ஆதம்பாக்கம் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது

ஆலந்தூர்: பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மேனேஜராக பணியாற்றுபவர் சீத்தாராமன் (58). இவர், கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை திருநெல்வேலி அழகுநேரி தச்சநல்லூரில் பசை தயாரிக்கும் கம்பெனியை தனது நண்பர் நெல்லையப்பன் (50) என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார்.
இந்நிலையில், கம்பெனியில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு பிரிந்துசென்ற சீத்தாராமன் தனியாக ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டிங் ஏஜென்சி நடத்தி வந்தார்.

இந்த நிறுவனத்தில் நெல்லையப்பன் ரூ.7 லட்சமும், அவரது மாப்பிள்ளை கணேஷ் (எ) ராம்குருநாதன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ரூ.20 லட்சம் பணமும் முதலீடு செய்துள்ளனர். இதில், 10 லட்சம் ரூபாய் லாபமும் கிடைத்துள்ளது. இந்நிலையில், 37 லட்ச ரூபாயை சீத்தாராமன் திருப்பிக் கொடுக்க வேண்டியது இருந்துள்ளது. இந்நிலையில், திடீரென பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ.37 லட்சத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் சீத்தாராமன் தவித்துள்ளார். நேற்று முன்தினம் சீத்தாராமன், ஆதம்பாக்கம் பகுதியில் வசித்துவரும் மகனை சந்திக்க வந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றுவிட்டது. பின்னர் அவரை மிரட்டி ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, நங்கநல்லூர் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயில் பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சீத்தாராமன் கொடுத்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் பிராங்க்ளின் டி.ரூபன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சீத்தாராமன் நடத்திய பங்குச்சந்தை நிறுவனத்தில் முதலீடு செய்த கணேசன் என்ற ராமகுருநாதன், அவரது நண்பர்கள் வழக்கறிஞர் தங்கராஜ், பிரபா, கார் டிரைவர் சதீஷ் உள்பட 5 பேர் சேர்ந்து கொடுத்த பணத்துக்கு ஆதாரம் இல்லாததால் அந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக சீத்தாராமனை கடத்திச்சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது தெரியவந்தது. கணேஷ் என்கிற ராமகுருநாதன், டிரைவர் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பிறகு அவர்களை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Stock Market Investment Money Fraud Intimidation Businessman Kidnapping: 2 Arrested
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...