துரைப்பாக்கம் கோயில் நிலத்தில் சுற்றித்திரிந்த பன்றிகளைபிடித்தது மாநகராட்சி

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீசெங்கழுநீர் விநாயகர், பிடாரி அரியாத்தம்மன், வேம்புலியம்மன், செங்கணியம்மன், கங்கையம்மன் கோயிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சவுக்கு மரங்கள் மற்றும் முட்புதர்களாக காட்சி அளிக்கிறது. இங்குள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு சுற்றித் திரியும் பன்றிகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைவதால் பொதுமக்கள் காய்ச்சல் பீதியில் உள்ளனர்.

சிலர் இயற்கை உபாதை கழிப்பதற்கும் அந்த பகுதியை உபயோகிக்கின்றனர். மேலும், இரவில் மர்ம நபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் நேற்று முன்தினம் 26ம் தேதி தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்தது. இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி 15வது மண்டல அதிகாரி உத்தரவின்பேரில் அங்கு சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்து சென்றனர். அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பை கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அந்த இடத்தில் வளர்ந்த முட்புதர்களும் அகற்றப்பட்டு வருகிறது.

Related Stories: