ராட்சத குழாயில் திடீர் கசிவு குளம்போல் தேங்கிய கச்சா எண்ணெய்: காசிமேடு மீனவர்கள் அச்சம்

தண்டையார்பேட்டை: துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ராட்சத குழாயில் செல்லும் கச்சா எண்ெணய் கசிவு ஏற்பட்டு, காசிமேடு பகுதியில் குளம்போல் தேங்கியது. இது, மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் தனியார் சமையல் ஆயில் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய், சென்னை துறைமுகத்தில் இருந்து காசிமேடு வழியாக ராட்சத குழாய் மூலம் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர், நிறுவனத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பாமாயிலாக மாற்றப்பட்டு, சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் துறைமுகத்திலிருந்து தனியார் நிறுவனத்துக்கு வரும் வழியில், காசிமேடு கடற்கரை அருகே கச்சா எண்ணெய் குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டு அப்பகுதியில் குளம்போல் எண்ணெய் தேங்கியது.

இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் காசிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சம்பந்தப்பட்ட கம்பெனி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கம்பெனி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராட்சத குழாயில் கசிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர். அதன்பிறகு கச்சா எண்ணெய் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குழாயில் கசிவு ஏற்பட்டு குளம்போல் தேங்கிய கச்சா எண்ணெயின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘ராட்சத குழாயில் வந்த கச்சா எண்ணெய் கசிந்துள்ளதால் நிலத்தடி நீர் மாசுபடும். கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் மீன்கள் இறக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து மீன்களை பாதுகாக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: