ரேஸ் பைக் மோதியதில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை,: சென்னையில் ரேஸ் பைக் மோதியதில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.41 லட்சத்து 42 ஆயிரம்  இழப்பீடு வழங்க வேண்டுமென சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கான நீதிமன்றம் (தீர்ப்பாயம்) உத்தரவிட்டுள்ளது. சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த பிளம்பர் ஜோசப். கடந்த 2018 ஜூலை மாதம் அதிகாலையில் தனது நண்பருடன் டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது நீலாங்கரையிலிருந்து திருவான்மியூர் நோக்கி நான்கு பைக்குகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் சென்றுள்ளனர். அதில், சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார் ஓட்டி வந்த  மோட்டார் பைக் மோதி ஜோசப் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஜோசப் மரணத்துக்கு 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரது தாய் ஸ்டெல்லாவும், மனைவி சத்திய பிரியாவும் சென்னை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பைக் ஓட்டி வந்த தினேஷ் குமாருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், வாகனத்திற்கு காப்பீடு செய்யப்படவில்லை என்றும் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பலியான ஜோசப் மரணத்துக்கு ரூ.41 லட்சத்து 42 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க பைக் உரிமையாளர் சங்கருக்கும், அதை ஓட்டி வந்த அவரது மகன் தினேஷ் குமாருக்கும் உத்தரவிட்டார். இந்த தொகையை இருவரும் இணைந்து மூன்று மாதத்திற்குள் ஜோசப்பின் தாய் மற்றும் மனைவிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: