ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணியின்போது கிரேன் உடைந்து கம்பிகளுடன் மாநகர பேருந்து மீது விழுந்தது: 3 பேர் படுகாயம்

பூந்தமல்லி: ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணியின்போது, கிரேன் உடைந்து 30 அடிநீளம் கட்டப்பட்ட பில்லர் கம்பிகளுடன் மாநகர பஸ் மீது விழுந்ததில், போக்குவரத்து ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் இரவு மட்டும் வாகனங்கள் செல்லவும், சில இடங்களில் ஒருவழிப் பாதையாகவும் மாற்றப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் குன்றத்தூர் பணிமனையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு மாநகர பஸ் ஒன்று ஆலந்தூர் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்தை அய்யாத்துரை (52) என்ற டிரைவர் ஓட்டினார். பூந்தமல்லி டிரங்க் சாலை ராமாபுரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மெட்ரோ ரயில் பணிக்காக பில்லர்கள் அமைப்பதற்காக 30 அடி நீளம் கட்டப்பட்ட கம்பிகளை ராட்சத கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. திடீரென கிரேனின் ஒரு பகுதி உடைந்து 30 அடி நீளம் கட்டப்பட்ட கம்பிகளுடன் இந்த பேருந்து மீது விழுந்தது. இதில் பஸ் டிரைவர் அய்யாதுரை, பணியாளர் பூபாலன் (45), கிரேன் ஆபரேட்டர் ரஞ்சித் குமார் (34) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பஸ் மீது கிரேனுடன் கம்பிகள் விழுந்ததால் உள்ளே இருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர்.

பின்னர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் சேதமடைந்த பஸ் மீட்கப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊழியர்கள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு மெட்ரோ ரயில் பணி திட்ட அதிகாரிகளும் வந்து விசாரித்தனர்.

Related Stories: