திருவனந்தபுரத்தில் முதல் டி20 இந்தியா - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்

திருவனந்தபுரம்: இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. டி20  ஆட்டங்கள்   செப். 28,  அக். 2, 4 தேதிகளில் முறையே திருவனந்தபுரம், கவுகாத்தி, இந்தூரிலும், ஒருநாள் ஆட்டங்கள் அக்.6, 9, 11 தேதிகளில் லக்னோ, ராஞ்சி, டெல்லியிலும் நடைபெற உள்ளன. முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு நடக்கிறது. ஆசிய கோப்பையில் பின்னடைவை சந்தித்தாலும், அடுத்து பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரை 2-1 என்ற  கணக்கில் கைப்பற்றியது இந்திய அணிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதிரடி வீரர்கள் அணிவகுப்பதால் இந்திய பேட்டிங் வரிசை மிக வலுவானதாக அமைந்துள்ளது.

காயம் காரணமாக ஜடேஜா விலகினாலும், அந்த இடத்தை ஆல் ரவுண்டர் அக்சர் படேல் கச்சிதமாக நிரப்பியுள்ளார். பந்துவீச்சு வியூகத்தில் தான் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஹூடா காயத்தாலும், ஷமி கொரோனா தொற்றாலும் அவதிப்படுவதால், அவர்களுக்கு பதிலாக ஷாபாஸ் அகமது, ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஷ்வின் நல்ல பார்மில் இருந்தும் அவரை பயன்படுத்திக்கொள்ள அணி நிர்வாகம் காட்டும் தயக்கம் துரதிர்ஷ்டவசமானது. இந்த தொடரிலாவது அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உலக கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில், வெற்றிக் கூட்டணிக்கான வீரர்களை அடையாளம் காண கேப்டன் ரோகித் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு இந்த தொடர் உதவும்.  இந்த ஆண்டு விளையாடிய 3 டி20 தொடர்களிலும் தோல்வியை சந்திக்கவில்லை என்ற உற்சாகம் தரும் புள்ளிவிவரத்துடன் தெம்போ பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி களமிறங்குகிறது. டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம்,  பிரிட்டோரியஸ், குவின்டன் டி காக், கேசவ் மகராஜ், ரபாடா, அன்ரிச் என திறமையான வீரர்கள் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார்கள். இரு அணிகளுமே வெற்றியை குறிவைத்து வரிந்துகட்டுவதால் ஆட்டத்தின் அனல் பறப்பது உறுதி.

*இந்தியா: ரோகித் (கேப்டன்), ராகுல் (துணை கேப்டன்), அர்ஷ்தீப், ஆர்.அஷ்வின், பும்ரா, சாஹல், தீபக் சாஹர், தினேஷ் கார்த்திக், கோஹ்லி, பன்ட், ஹர்ஷல் படேல், அக்சர் படேல், சூரியகுமார் யாதவ். தென் ஆப்ரிக்கா: தெம்பா பவுமா (கேப்டன்), குவின்டன் டி காக், ஜார்ன் பார்ச்சூன், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், ஹெயின்ரிச் கிளாஸன், கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்க்கியா, வேய்ன் பார்னெல், அண்டில் பெலுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், காகிசோ ரபாடா, ரலீ ரூஸோ, டாப்ரைஸ் ஷம்சி, டிரைஸ்டன் ஸ்டப்ஸ்.

*இதுவரை...

* இரு அணிகளும் இதுவரை 20 டி20 ஆட்டங்களில் மோதியுள்ளதில் இந்தியா 11 - 8 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.

* இந்தியா - தெ.ஆப்ரிக்கா இடையே 7 டி20 தொடர்கள் நடந்துள்ளன. தென் ஆப்ரிக்காவில்  நடந்த 4 தொடர்களில் இந்தியா மூன்றில் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்தியாவில் நடந்த 3 தொடர்களில்  ஒன்றை தென் ஆப்ரிக்கா வென்றுள்ள நிலையில், 2 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன.

* உலக கோப்பை தொடர்களில் மோதிய 3 ஆட்டங்களிலும் இந்தியா வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்ற நிலையில், பெங்களூருவில் நடந்த ஆட்டம் (ஜூலை, 2022) மழை காரணமாக கைவிடப்பட்டது.

Related Stories: