×

ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா ஏ: நியூசிலாந்து ஏ ஒயிட்வாஷ்

சென்னை: நியூசிலாந்து ஏ அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 106 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து ஏ அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை (அதிகாரப்பூர்வமற்றது) 0-1 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. சென்னையில் நடைபெற்ற முதல் 2 போட்டியிலும் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

டாஸ் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி 49.3 ஓவரில் 284 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன் (68 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஷர்துல் தாகூர் 51 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்),  திலக் வர்மா 50 ரன் (62 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), அபிமன்யூ ஈஸ்வரன் 39,  ரிஷி  தவான் 34 ரன் விளாசினர். நியூசி. தரப்பில் ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர், மைக்கேல் ரிப்பன் தலா 2 விக்கெட், ஜோ வாக்கர் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய நியூசி. அணியில் தொடக்க வீரர் டேன் கிளீவர் மட்டும் உறுதியுடன் போராட, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறி அணிவகுத்தனர்.

நியூசிலாந்து ஏ அணி 38.3 ஓவரில் 178 ரன்னுக்கு சுருண்டது. டேன் கிளீவர் அதிகபட்சமாக 83 ரன் (89 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, சாத் போவஸ் 20, ரிப்பன் 29 ரன் எடுத்தனர். இந்தியா ஏ தரப்பில் ராஜ் பவா 5.3 ஓவரில் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ராகுல் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2, ரிஷி தவான், ராகுல் திரிபாதி தலா 1 விக்கெட் எடுத்தனர். 106 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

Tags : India ,New Zealand , India A clinch series with hat-trick win: New Zealand A whitewash
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!