ராஜஸ்தானில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கெலாட் மீது தவறு இல்லை: சோனியாவிடம் மேலிட பார்வையாளர்கள் அறிக்கை

புதுடெல்லி: ‘ராஜஸ்தானில் முதல்வரை தேர்வு செய்யும் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கும், அசோக் கெலாட்டிற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை’ என சோனியா காந்திக்கு மேலிட பார்வையாளர்கள் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில், கட்சி மேலிடத்தின் விருப்பமான வேட்பாளராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இருப்பதால் அவரே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற ராகுலின் கொள்கைப்படி, ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து கெலாட் விலக வேண்டும். அந்த பதவி இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கு வழங்க கட்சி மேலிடம் விரும்பியது.

ஆனால், இதற்கு கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பைலட்டை முதல்வராக்கினால் ராஜினாமா செய்வோம் என கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 92 பேர், ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த மாநில மேலிட பார்வையாளர்கள் அஜய் மக்கான், மல்லிகார்ஜூனா கார்கே எடுத்த முயற்சியும் தோற்றது. இதனால், ராஜஸ்தான் அரசியலிலும் உட்கட்சியிலும் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், கெலாட் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள சோனியா, ராஜஸ்தான் நிலவரம் பற்றி அறிக்கை அளிக்கும்படி மேலிட பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மேலிட பார்வையாளர்கள் தங்கள் அறிக்கையை சோனியாவிடம் நேற்று தந்தனர். அதில், ‘ராஜஸ்தானில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் கெலாட்டிற்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. கெலாட்டின் ஆதரவாளர்களான ஒரு அமைச்சர், கட்சியின் கொறடா உள்ளிட்ட 3 பேர் தான் எம்எல்ஏக்களை தவறாக வழிநடத்துகின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. எனவே, கெலாட் மீதான கட்சி மேலிடத்தின் கோபம் தணிந்துள்ளது. எனவே, இன்னும் 24 மணி நேரத்தில் ராஜஸ்தான் முதல்வர் விஷயத்தில் கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

* பைலட் டெல்லியில் முகாம்

சச்சின் பைலட் நேற்று திடீரென டெல்லி வந்தார். புதிய முதல்வர் விவகாரம் தொடர்பாக அவர் சோனியா காந்தியை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

* விண்ணப்பம் பெற்றவர்கள் யார்?

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி, சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து, கியூஆர் கோடுடன் கூடிய சோனியாவின் வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இந்த அடையாள அட்டையைதான் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் காட்ட வேண்டும். பின்னர், மிஸ்திரி கூறுகையில், ‘‘கெலாட் வேட்புமனு தாக்கல் செய்கிறாரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. சசிதரூர் வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளார். பவன் பன்சால் விண்ணப்பம் வாங்கியுள்ளார். யார், யார் விண்ணப்ப படிவத்தை பெற்றுள்ளனர் என்பதை சோனியாவிடம் தெரிவித்துள்ளேன்’’ என்றார். அதே சமயம், தேர்தலில் போட்டியிடவில்லை என பன்சால் கூறியுள்ளார்.

Related Stories: