திருப்பதியில் பிரமோற்சவத்தின் முதல் நாள் கோலாகலம் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: முதல்வர் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தார்

திருமலை: திருப்பதியில் நேற்று நடந்த முதல் நாள் வருடாந்திர பிரமோற்சவத்தில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக, மகா விஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தாயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் 4 மாடவீதியில்  ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கருட கொடியை கொடிமரத்தில் ஏற்றினர்.

முதல்வர் ஜெகன் மோகன் தனது குடும்பத்தினருடன் பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமிக்கு சமர்ப்பித்தார். பின்னர், சுவாமியை தரிசித்த அவர், தேவஸ்தானம் சார்பில் அச்சிடப்பட்ட 2023ம்  ஆண்டுக்கான காலெண்டர், டைரிகளை வெளியிட்டார். பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு, பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் முதல் நாளான நேற்று 7 தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதை தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தின் 2வது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பிரமோற்சவத்தால் திருமலை விழாக்கோலம் பூண்டு உள்ளது.

* அரை மணி நேரத்தில் தரிசனம்

கடந்த சில வாரங்களாக திருப்பதியில் பக்தர்கள் அலை மோதினர். சுவாமி தரிசனத்துக்கு பல மணி நேரமானது. நேற்று முன்தினம் 52 ஆயிரத்து 682 பேர் தரிசனம் செய்தனர். உண்டியல் மூலமாக ரூ.5.57 கோடி காணிக்ைக கிடைத்தது. நேற்று காலை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. வைகுண்டம் வளாக அறைகளில் காத்திருக்காமல், நேரடியாக சென்று அரைமணி நேரத்தில் மக்கள் தரிசனம் செய்கின்றனர்.

* மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் முன்பதிவு

திருப்பதியில் அடுத்த மாதத்துக்கான மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான டிக்கெட் நாளை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் https://tirupatibalaji.ap.gov.in வெளியிடுகிறது. ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்கள் வழங்கப்படும். இதை முன்பதிவு செய்தவர்கள் தினமும் பிற்பகல் 3 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Related Stories: