அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தார்: கட்சியில் இருந்தே நீக்கி எடப்பாடி அதிரடி

சென்னை: அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்த ஒரு சில மணி நேரத்தில், அவரை கட்சியில் இருந்தே நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் கட்சியில் இருந்து சில ஆண்டுகளாக பண்ருட்டி ராமச்சந்திரன் ஒதுங்கி இருந்தார். இந்தநிலையில்  அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். இதற்காக கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக கட்சியை கைப்பற்ற முயற்சி செய்யும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டுக்கு போய் நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து கடந்த வாரம் பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பண்ருட்டி ராமச்சந்திரன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டி அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்ததுடன், ‘‘எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் நீடிக்கும் வரை கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லை’’ என கூறினார். இது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ் நேற்று நியமித்தார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் (அதிமுக அமைப்பு செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில், அவரை அதிமுக கட்சியில் இருந்தே அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் பண்ருட்டி ராமச்சந்திரன் (அமைப்பு செயலாளர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுக தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது’’ என்று கூறியுள்ளார். அதிமுகவின் மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் புதிய பதவி கொடுத்ததும், ஒரு சில மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியில் இருந்தே அவரை நீக்கியுள்ள சம்பவம் அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: