தடையின்மை சான்று வழங்க ரூ.50,000 லஞ்சம் வாங்கிய நிலவியலாளர் கைது: திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவைச் சேர்ந்தவர் லியாகத்அலி(45). இவர், நண்பர்களுடன் இணைந்து, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அண்ணா நுழைவாயில் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும்  கம்பெனியை நடத்தி வருகிறார். இதற்கு நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையின்மை சான்று கோரி, திருவண்ணாமலையில் உள்ள நில நீர் நிர்வாகத்துறை அலுவலகத்தில், லியாகத் அலி சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். அதை பரிசீலித்த உதவி நிலவியலாளர் சிந்தனைவளவன், ரூ.3.50 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் லியாகத் அலி புகார் அளித்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனைப்படி, கள ஆய்வுக்கு வரும்போது முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் தருவதாக லியாகத் அலி தெரிவித்துள்ளார். அதன்படி நிலவியலாளர் சிந்தனைவளவன், நேற்று அந்த கம்பெனிக்கு நேரில் வந்து களஆய்வு நடத்தினார். பின்னர், லியாகத் அலியிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை வாங்கினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், சிந்தனைவளவனை கைது செய்தனர்.

Related Stories: