கோவை ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் விலக்கு அளிக்கும் பிரிவில் எப்படி கொண்டுவரப்பட்டது? ஒன்றிய அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எப்படி விலக்கு அளிக்கும் பிரிவில் வருகிறது என்று விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த  நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில், கல்வி நோக்கத்திற்காக கட்டிடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா என்று ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என்று விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு  விசாரணையை தள்ளிவைத்தனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: