இழப்பீடு தொகை தர ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெண் தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை

தர்மபுரி: மின்சாரம் தாக்கி பலியான மகனுக்காக இழப்பீட்டு தொகை தர ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு திட்ட பெண் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பூதிப்பட்டியை சேர்ந்தவர் ராணி (55). இவரது மகன் பரமசிவம் (30), கடந்த 2013 மார்ச் 10ம் தேதி சிக்கன் கடையில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். இதனை தொடர்ந்து ராணி இழப்பீடு கேட்டு பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மணிமேகலையிடம் மனு அளித்தார். இழப்பீட்டு தொகையாக ராணிக்கு ரூ.1.25 லட்சம் வந்தது.

இதை பெற்றுக்கொள்ள ராணி சென்ற போது, அதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக்கூறிய தாசில்தார் மணிமேகலை, ராணியின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டை வாங்கி வைத்துக்கொண்டார். பேரம் பேசி ரூ.7 ஆயிரம் தருவதாக கூறிய ராணி இதுபற்றி தர்மபுரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி தாசில்தார் மணிமேகலையிடம், ராணி ரூ.7 ஆயிரம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் மணிமேகலையை கைது செய்தனர். இந்த வழக்கை தர்மபுரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேசன் விசாரித்து மணிமேகலைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை  மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும், ரேஷன் கார்டு இழப்பீட்டு தொகைக்கான ஆணையை தாசில்தாரிடம் இருந்து பெற்றுத் தர போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: