சோறு ரொம்ப முக்கியம் விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க... நெல் கொள்முதலில் தனியாரை களமிறக்குகிறது ஒன்றிய அரசு; குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பது இனி கஷ்டம்தான்

தெய்வத்தின் தொழில்..அப்படித்தான் சொல்ல வேண்டும் விவசாயத்தை. புழு, பூச்சி தொடங்கி உயிர் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒருவகையில் உணவு கிடைக்க வழிவகுக்கும் தொழில். வேறு எந்த தொழிலுக்கும் கிடைக்காத மாண்பு இது. ஏன் மண் வளம் பெறவும், வளமையான மண் வளம் கொழிக்கவும் செய்யும் தொழில்தான் விவசாயம். அந்த விவசாயத்தை மேற்கொள்ளும் அத்தனை பேரும் சாமிகள். ஆனால் அவர்களுக்குத்தான் எத்தனை தொந்தரவுகள். இயற்கைதான் அடிக்கடி தன் பங்குக்கு விளையாடுகிறது என்றால், விவசாயத்தை மேம்படுத்தவும், விளைபொருட்களை பாதுகாக்கவும், நல்ல விலை கிடைக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்காமல் அரசுகளும் புறக்கணித்தால் அவர்கள் எங்கே செல்வார்கள்?.

உடலை வருத்தி, ரத்தத்தை வியர்வையாக சிந்தி தினம் தினம் வயல் வெளியில் உழவாடும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர தொந்தரவு செய்யக்கூடாது. ஆனால் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும், உரம் மானியம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வழக்கம் போல் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் உழவே தலை என்பதற்கு பதில் உழவர்களுக்கு தலைவலி கொடுக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளன. இதில் லேட்டஸ்ட் உணவுப்பொருட்களை விவசாயிகளிடம் இருந்து இனிமேல் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற முடிவு தான். அதிர்ந்து போய் நிற்கிறார்கள் விவசாயிகள்.

2020 மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கியது அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 5 கிலோ அாிசி அல்லது 5 கிலோ கோதுமை இலவசமாக ஒன்றிய அரசால் எப்படி வழங்க முடிகிறது?. அரசு கொள்முதல் நிலையங்கள் தான் அதற்கு காரணம். ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநில விவசாயிகளிடம் இருந்து காரிப் மற்றும் ராபி பயிர் பருவத்தில் கொள்முதல் செய்து ஒன்றிய உணவு கிட்டங்கிற்கு அனுப்பி வைத்த அரிசி, கோதுமையைத்தான் இன்று வரை ஒவ்வொரு மாதமும் இலவசமாக 80 கோடி குடும்பங்களுக்கு ஒன்றிய அரசால் வழங்க முடிந்து இருக்கிறது. இன்றும் 4 கோடி டன் அரிசி ஒன்றிய உணவுத்துறை குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அந்த கட்டமைப்பு பெரியது. அப்படி உருவாக்கப்பட்ட அமைப்பை இன்று தகர்க்கக்கூடிய செயல் இந்த தனியார் கொள்முதல் அறிவிப்பு.

ஒவ்வொரு ஆண்டும் விவசாய  பயிர்களுக்கு அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை முக்கியமானது. நாட்டின் பசி, பட்டினியை நீக்க வழிசெய்யும் முதல் நடவடிக்கை அது. களத்திற்கு செல்லும் விவசாயிகளின் நம்பிக்கை தொகை அது. இன்று அது கூட கிடைக்காது என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்? தமிழகத்தில் மட்டும் 2021-22 நிதியாண்டில் ஆகஸ்ட் வரை மொத்த உற்பத்தி நெல் 1,22,22,463 டன். இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்த நெல் 42,55,135 டன். இது தமிழக விவசாயிகளின் மொத்த உற்பத்தியில் 35 சதவீதம். இதைத்தான் ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய அனுமதித்து உள்ளது. அதுதான் உண்மை. இந்த 42.50 லட்சம் டன் நெல்லுக்குத்தான் குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கும். மீதம் உள்ள 79.67 லட்சம் டன் நெல் தனியாருக்குத்தான் விவசாயிகள் விற்பனை செய்து இருப்பார்கள். விவசாயிகளிடம் தனியார் கொள்முதல் எப்படி இருக்கும்?. அவர்கள் வைத்ததுதான் சட்டம். கேட்ட விலைக்கு விவசாயிகள் கொடுத்துவிட்டு வந்து இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்த நிலை, நாடு முழுவதும் இதே தான். ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உணவு பொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு அட்டவணை தயாரித்து மாநிலம் வாரியாக அனுப்பி வைத்து விடுவார்கள். அதைத்தான் ஒவ்வொரு மாநிலமும் கொள்முதல் செய்து ஒன்றிய அரசின் உணவு கிட்டங்கிக்கு அனுப்பி வைத்து வருகிறது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் அத்தனையும் அரசே கொள்முதல் செய்வது இல்லை. அப்படிப்பட்ட வசதிகளும் இங்கு இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கூட அந்த நடவடிக்கை தொடங்கப்படவில்லை என்பது எத்தனை வேதனை.

ஒவ்வொரு தாலுகா தோறும் தேவைப்படும் அளவுக்கு தானிய கிடங்குகள் ஏற்படுத்துவது எத்தனை முக்கியம். இதுவும் இப்போது உள்ள காலக்கட்டத்தில் விவசாய விளைபொருட்களை எத்தனை நாட்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறோமோ அத்தனை நடவடிக்கையும் அவசியமானது. 135 கோடி மக்கள் கொண்ட நமது நாட்டில் இது மிகவும் முக்கியமல்லவா. அரசு கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தி, விளைபொருட்களை நீண்ட காலம் பாதுகாக்க கூடிய கட்டமைப்புகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதற்கு பதில் தனியார் வசம் விளைபொருட்கள் கொள்முதலை ஒப்படைத்தால்...மிகவும் திறம்பட செய்வார்கள். மேலும் கொள்முதல்  செலவும் குறையும் என்கிறது ஒன்றிய அரசு. அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறையை அமல்படுத்தவும் ஒவ்வொரு மாநில அரசுக்கும் அறிவுறுத்தி இருக்கிறது.

அதோடு இனிமேல் உணவு பொருள் கொள்முதலில் 2 சதவீத  செலவீன தொகையை மட்டுமே ஒன்றிய அரசு அனுமதிக்கும் என்று அறிவித்து இருக்கிறது. பரந்து விரிந்த நாட்டில் கொள்முதல் செலவீனம் இடத்திற்கு இடம் வேறுபடும். சில மாநிலங்களில் 2 சதவீதம் இருக்கும். சில மாநிலங்களில் 8 சதவீதம் வரை இருக்கும். இனிமேல் 2 சதவீதம் தான் என்று கறார் காட்டியிருக்கிறது ஒன்றிய அரசு. அந்த சுமையும் இனிமேல் மாநில அரசுகள் தலையில் விழப்போகிறது. தனியார்கொள்முதல், செலவீன தொகை ரத்து போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து இனி ரேசன் பொருட்கள் ரத்து என்ற அடுத்த கட்டத்தை நோக்கி கூட ஒன்றிய அரசு செல்லும். அப்படி ஒரு நிலை வந்தால் விளைபொருட்களை உற்பத்தி செய்ய போராடும் விவசாயிகள், இனிமேல் அதற்கான விலை பெறவும் போராட வேண்டியது வரும். இது எப்படி விவசாயத்தை ஊக்குவிக்கும்?. விவசாயிகள் மத்தியில் தன்னம்பிக்கையை கொடுக்கும்?. விவசாயிகளின் ஒரே நம்பிக்கை மண்தான். அந்த மண் தான் அவர்களது வாசம்.. அதுதான் அவர்களது சுவாசம்.. அவர்களை நிம்மதியாக விவசாயம் செய்ய வைத்து சுவாசிக்க விடவேண்டும். கண்கலங்க விட வேண்டாம்.

* 30 கோடி விவசாயிகள் கதி என்ன ஆகும்?

நாடு முழுவதும் 2020-21ல் 12.43 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. 2021-22 ஜூன் வரை மட்டும் 13 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் காரிப் பருவத்தில் வரவேண்டிய உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிகிறது. காரணம் வடமாநிலங்களில் அதிக மழை, சில இடங்களில் குறைவான மழை. அதனால் 11 கோடி டன்னுக்கு பதில் இந்த காரிப் பருவத்தில் 10 கோடி டன் தான் வரும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இது ஒன்றிய அரசு தகவல். ஆனால் உண்மையில் பெரிய அளவு பாதிப்பு இருக்கும் என்று தெரிகிறது. அதனால் தான் பாசுமதி அரிசியை தவிர மற்ற அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அரிசி ஏற்றுமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி உணவு மற்றும் வர்த்தக கொள்கைத்துறை நிபுணர் தேவீந்தர்சர்மா கூறுகையில்,’ இன்று கூட இந்தியாவிடம் 4 கோடி டன் அரிசி உபரியாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரிசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் உபி, பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களில் உள்ள 30 கோடி விவசாயிகள் நிலைமையை பற்றி இன்று யாரும் பேச மறுக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயம் தானே எல்லாம். அவர்களுக்கு உரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு அறிவித்து இருக்க வேண்டாமா?. பெருநிறுவனங்கள் பாதிக்கப்படும் போது மட்டும் நிவாரணம் அறிவிக்கும் அரசு, விவசாயிகளை கண்டுகொள்ளாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.

* ஆண்டுவாரியாக பயன் அடைந்த விவசாயிகள்

தமிழகத்தில் காரிப் பருவத்தில் மட்டுமே குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஒன்றிய அரசு கிட்டங்கிக்கு வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஆதாரவிலையில் நெல் வழங்கும் விவசாயிகள் விவரம்;

2015-16    8,50,640

2016-17    73,367

2017-18    4,13,076

2018-19    4,98,097

2019-20    5,85,241

2020-21    8,52,152

2021-22    6,72,791

* உலக அளவில் உயர்ந்த அரிசி, கோதுமை விலை

ரஷ்யா-உக்ரைன் போர், பாகிஸ்தான் வெள்ளம், இந்தியாவில் இருந்து கோதுமை, அரிசி ஏற்றுமதிக்கு தடை ஆகியவை உலக அளவில் அரிசி மற்றும் கோதுமை விலையை உயர்த்தி உள்ளன. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் அரிசி கிடைக்காமல் இந்தியாவிடம் கைஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச ஆதார விலை (இந்த ஆண்டு)

* குவிண்டால் நெல் ரூ.2040

* ஏ கிரேடு நெல் ரூ.2060

* கோதுமை ரூ.2970

* எள் ரூ.523

* பாசிப்பருப்பு ரூ.480

* சூாியகாந்தி விதை ரூ.385

* வேளாண் சட்டத்தின் புதிய வடிவம் தான் விவசாயிகள் குமுறல்

உணவுப்பொருள் கொள்முதலில் தனியாரை ஈடுபட வைக்கும் செயல் ஒன்றிய அரசு வாபஸ் பெற்ற 3 வேளாண் சட்டங்களின் ஒருவகைதான் இது. அதைத்தான் வேறுமாதிரியாக அமல்படுத்த ஒன்றிய அரசு துடிக்கிறது என்று குமுறுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில் குமார். வேளாண் பொருட்களை அரசு மானியம் செய்யும் போது குறைந்தபட்ச ஆதார விலை உறுதியாக கிடைக்கும். அதே சமயம் தனியார் கொள்முதல் செய்தால் அவர்கள் வைத்த விலைக்குதான் விளைபொருட்களை கொடுத்து விட்டு வரவேண்டும். மேலும் அரசு என்றால் உறுதியாக பணம் வரும். தனியாரிடம் எப்படி பணம்  கேட்பது?. எந்த தொகையை கேட்பது?. அதோடு விளைபொருள் உற்பத்திக்கு ஏற்ப சில ஊர்களில் இரண்டு கொள்முதல் நிலையங்கள் கூட அரசு சார்பில் செயல்படுகின்றன. தனியார் கொள்முதல் என்றால் அவர்கள் சொல்லும் இடங்களுக்குதான் சென்று விவசாயிகள் விளைபொருட்களை கொடுக்க வேண்டும். இதுவும் விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாகும் என்று தெரிவித்தார்.

* தேவை 6 கோடி டன் தான் 9 கோடி டன் கொள்முதல் ஏன்? கேட்கிறார் ஒன்றிய உணவுத்துறை செயலாளர்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து ஆண்டுதோறும் விளைபொருட்கள் கொள்முதல் ஒட்டுமொத்த தேவை 6 கோடி டன் தான். ஆனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் நிர்ணயித்த அளவை விட அதிகமாக 9 கோடி டன் விளைபொருட்களை கொள்முதல் செய்து ஒன்றிய உணவு கூட்டுறவு நிறுவனத்தின் கிட்டங்கிக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள் என்று அங்கலாய்த்து இருக்கிறார் ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே. ஒன்றிய உணவு கூட்டுறவு நிறுவனம் மற்றும் மாநில நுகர்பொருள் வாணிப கழகங்கள் மட்டும் ஏன் கொள்முதல் செய்ய வேண்டும்?. தனியார் கொள்முதல் செய்தால் என்ன தவறு?. இப்போது நடக்கும் கொள்முதலைவிட தனியார் கொள்முதல் செய்தால் குறைந்தபட்ச ஆதாரவிலையையும் குறைவாக கொடுக்கலாம். மேலும் அவர்கள் திறம்பட கொள்முதல் செய்வார்கள். அடுத்த சீசன் முதல் கொள்முதலில் தனியாருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார் பாண்டே.

* இந்த ஆண்டு 1.87 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதில் மாநிலஅரசுகள் 1.77 கோடி டன்னும், ஒன்றிய அரசு நேரடியாக 10 லட்சம் டன்னும் கொள்முதல் செய்ய உள்ளன.

* 2021-22ம் ஆண்டு காாிப் பருவத்தில் 8.82 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசு 6.73 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளது.

* தமிழ்நாடு அரசு 43.28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. இங்கு ஒன்றிய அரசு எந்தவித கொள்முதலும் செய்யவில்லை.

* நாடு முழுவதும் 2021-22ல் காரிப் பருவத்தில் நெல், கோதுமை 1.30 கோடி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் 17.83 லட்சம் விவசாயிகளிடம் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது.

* பயிர்காப்பீடு திட்டத்தில் இந்தியா முழுவதும் 30 சதவீத விவசாயிகள் மட்டுமே இதுவரை சேர்ந்துள்ளனர்.

Related Stories: