தேனாம்பேட்டையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு: அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில், கடந்த 2006ம் ஆண்டு அதிமுக சார்பில் மார்பளவு எம்ஜிஆர் சிலை ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் எம்ஜிஆர் சிலையின் மூக்கை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். வழக்கம்போல் நேற்று அதிகாலை அப்பகுதி மக்கள் எம்ஜிஆர் சிலையை பார்த்தபோது, சிலையின் மூக்கு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஜிஎன் செட்டி சாலையில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். அதைதொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்ட 2 புகார்கள் தனித்தனியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார்களின் படி போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: