சுற்றுலா துறை சார்பில் மூன்று மாவட்டத்தில் ரூ.6.57 கோடியிலான கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சுற்றுலாத் துறை சார்பில் மூன்று மாவட்டத்தில் ரூ.6.57 கோடி மதிப்பிலான கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் திருச்சி, கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், திருச்சியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி கலெக்ட பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருச்சிக்கு வருகைபுரியும் லட்சக்கணக்கான உள்நாடு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில், தமிழ்நாடு ஒட்டலில் ரூ.4 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் செலவில் தங்கும் விடுதி மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், தொழில் கூட்டங்கள் நடத்துவதற்கு 110 நபர் இருக்கை வசதி கொண்ட கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

அதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வரலாற்று நினைவிடங்களுக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடலூர் சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கும், கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் சிதம்பரம் நகரில் ரூ.60 லட்சத்தில் புதிய சுற்றுலா அலுவலகம் கட்டப்பட்டுள்ள கட்டிடம், மதுரை, கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தர்கா மற்றும் மஸ்ஜித் வக்ஃப் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனிதத் தலமாகும். இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு அதிகளவில் உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிகின்றனர். புனித யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில் ரூ.1 கோடியே 80 லட்சத்து 21 ஆயிரம் செலவில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வுக்கூடங்கள் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Related Stories: