பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினரை தனிப்பட்ட வர்க்கமாக வகைப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் திமுக கூடுதல் மனு

புதுடெல்லி: ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினரை குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட வர்க்கமாக வகைப்படுத்த முடியாது,’ என உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு ஒன்றிய அரசு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் எதிர்தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவுக்கு பதில் அளிக்கும் புதிய மனுவை, திமுக.வின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் நேற்று தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு முன்பிருந்த காலகட்டத்துக்கு கொண்டு சென்று விடும். இடஒதுக்கீடு என்பது வறுமை மீட்பு திட்டமாக கணக்கில் கொள்ளக் கூடாது.

இடஒதுக்கீடுக்காக அமைக்கப்பட்ட. ஷின்கோ கமிஷன் கூட இத்தகைய பரிந்துரைகளை வழங்கவில்லை. ஒவ்வொரு பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை கணக்கில் கொள்ளாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியாது. அப்படி இருக்கும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஒரு குறிப்பிட்ட மற்றும் தனிப்பட்ட வர்க்கமாக வகைப்படுத்த முடியாது. இவர்களுக்கு அசாதாரண சூழலில் இடஒதுக்கீடு வழங்கியதாக ஒன்றிய அரசு கூறுவது, எந்த வகையிலும் நம்ப முடியாது.

வறுமை என்பது அனைத்து தரப்பிலும் சமமான ஒன்றாக இருக்கும்போது, இதனை இடஒதுக்கீடு வழங்குவதற்கான அசாதாரண சூழல் என எவ்வாறு வகைப்படுத்த முடியும்? இந்த இடஒதுக்கீடு அரசியல் சாசன சட்ட திருத்தமாக கொண்டு வரப்பட்டு விட்டதால், அதனை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என அரசு கூறுவது, ஏற்கனவே இது தொடர்பான விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* முதல் முறையாக நேரலை

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வது தொடர்பாக, தலைமை நீதிபதி யு.யு.லலித் சமீபத்தில் மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், முதல் கட்டமாக அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் வழக்குகள் மட்டும் நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசியல் சாசன அமர்வு விசாரித்த வழக்குகள் நேற்று நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. webcast.gov.in/scindia/ என்ற தளத்தின் மூலம் அரசியல் சாசன அமர்வு விசாரித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வழக்கு, சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கு, டெல்லி - ஒன்றிய அரசு இடையேயான அதிகார மோதல் வழக்கு உள்ளிட்டவை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்த முயற்சியை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

* தீர்ப்பு ஒத்திவைப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா எம் திரிவேதி, ஜெ.பி.பர்திவாலா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கை கடந்த 7 நாட்களாக விசாரித்து வந்தது. இதில், அனைத்து தரப்பின் வாதம் நேற்றுடன் முடிந்ததால், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: