8 மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ மீண்டும் அதிரடி சோதனை: 200க்கும் மேற்பட்டோர் கைது

புதுடெல்லி: நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில் சோதனை நடத்திய நிலையில், நேற்று மீண்டும் 8 மாநிலங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்காக நிதி திரட்டியது, உள்நாட்டில் மத கலவரத்தை தூண்டுதல், இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர ஊக்குவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில், நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை சேர்ந்தவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தினர்.

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லி, கர்நாடகா, மும்பை, உத்தரப் பிரதேசம், அசாம், மத்திய பிரதேசம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 8 மாநிலங்களில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகளும், அந்தந்த மாநில போலீசாரும் நேற்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினர். அதிகாலை 12.30 மணி முதல் இந்த சோதனை நடைபெற்றது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் நடந்த சோதனையின் போது பாதுகாப்பிற்காக துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அதிகபட்சமாக கர்நாடகாவில் 13 மாவட்டங்களில் நடந்த சோதனையில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் 30 பேரும், அசாமில் 25 பேரும், மத்திய பிரதேசத்தில் 21 பேரும், குஜராத்தில் 17 பேரும், உபி.யில் 44 பேரும், மகாராஷ்டிராவில் 6 பேரும் என 8 மாநிலங்களில் 247 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் வயநாட்டில் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் சலீம் என்பவரின் டயர் கடையில் இருந்து 4 பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையை கண்டித்து கர்நாடகாவின் பல பகுதிகளிலும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஏற்கனவே, சோதனை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* பிஎப்ஐயின் தொடர்புகள் முழுவதும் தகர்க்கப்படும்

உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அளித்த பேட்டியில், ‘‘பிஎப்ஐயின் நெட்வொர்க் முழுவதுமாக தகர்க்கப்படும். நாடு முழுவதும் அனைத்து மாநிலத்திலும் தற்போது விழிப்புணர்வு வந்துள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். எந்த சூழலிலும் உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம். கடும் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

* என்ஐஏக்கு எச்சரிக்கை

சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், துர்க் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘அமலாக்கத் துறை, வருமான வரித்துறை என எந்த ஒன்றிய விசாரணை அமைப்புகளையும் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். ஒன்றிய அமைப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களை எதிர்க்கவில்லை. ஆனால், தேவையில்லாமல், தவறு செய்யாதவர்களை குறிவைத்து செயல்பட்டால், அது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நாங்கள் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் உண்மைக்காக போராடுவோம்’’ என்றார்.

* பதற்றம் நிறைந்த டெல்லி ஜமீயா நகர், ஷாகீன்பாக் பகுதிகளில் என்ஐஏ சோதனையின் போது, அசம்பாவிதங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

* என்ஐஏ சோதனைக்கு இடையே, டெல்லியில் உள்துறை அமைச்சர் செயலாளர் அஜய் பல்லா தலைமையில் என்ஐஏ டைரக்டர் ஜெனரல், உளவுத்துறை தலைவர் மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர் ஆகியோர் கொண்ட உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

* இந்துத்துவா ஆட்சியின் இரண்டு அடிமைகள்

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில், ‘பாஜ ஆளும் மாநிலங்களில் தடுப்பு காவல் என்ற பெயரில் அதிகப்படியான கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பிஎப்ஐயை குறிவைத்து நடத்தப்படும் இந்த சூழ்ச்சி, ஜனநாயகப் போராட்டங்களுக்கான உரிமையை தடுப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஒன்றியத்தில் உள்ள இந்துத்துவா ஆட்சியின் 2 அடிமைகளாக என்ஐஏ.வும், அமலாக்கத்துறையும் உள்ளன’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: