மழையால் ஏற்படும் பயிர் சேதத்தை கண்காணிக்க குழுக்கள் அமைத்து, தினசரி பாதிப்பு நிலையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பயிர் சேதத்தை கண்காணிக்க குழுக்கள் அமைத்து, தினசரி பாதிப்பு நிலையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் வேளாண்மை – உழவர் நலத் துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் 26.09.2022 அன்று அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலைவாணர் அரங்கில் அறிவுரைகள் வழங்கியதைத் தொடர்ந்து, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு 27.09.2022 அன்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

அதன் விபரம் பின்வருமாறு. நமது மாநிலத்தில் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் முதல் உள்ள ராபிப் பருவத்தில், 25.35 இலட்சம் எக்டர் பரப்பளவில் பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும். குறிப்பாக, சம்பா, தாளடி மற்றும் பிசானப் பருவத்தில் நெல் 12.13 இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படுவதால், மாநிலத்தின் நெல் உற்பத்தியில் வடகிழக்குப் பருவம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் ஆண்டு மழையளவு 937.50 மிமீட்டரில் 48 சதவிகிதம் அதாவது 448 மிமீ மழை அக்டோபர் முதல் டிசம்பர் முடிய உள்ள வடகிழக்கு பருவத்தில் பெய்கிறது. வடகிழக்கு பருவத்தில், குறைந்த கால இடைவெளியில் அதிக மழை பெய்வதாலும், நதிகளில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதாலும், பயிர்களுக்கு இழப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களுக்கும், தோட்டக்கலை துணை இயக்குநர்களுக்கும் பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்கள்.

1. தரமான விதைகள் விநியோகம்:

நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி பயிர்களில் தரமான விதைகள் காலத்தே இருப்பு வைத்து விநியோகம் செய்ய வேண்டும்.

2. இரசாயன உரங்கள் இருப்பு வைத்தல்:

தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 3,28,030 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது.  எதிர்வரும் ராபிப் பருவத்திற்குத் தேவையான யூரியா, டிஏபி,  பொட்டாஷ், மற்றும் கலப்பு உரங்கள் போன்ற இரசாயன உரங்களுக்காக ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டைப் பெற்று, மாதாந்திர விநியோகத்திட்டத்தின் படி தேவையான உரங்கள், உர உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்று இருப்பு வைத்து உரிய காலத்தில் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும்.  

* பயிரின் தேவையை அறிந்து விவசாயிகள் பயிருக்கு இரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், தேவைக்கும் அதிகமாக உரங்களை பயன்படுத்தினால், பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாகி, மகசூல் குறையும் என்பதை விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

3. பூச்சி நோய் கண்காணிப்பு:

வடகிழக்கு பருவமழையின் போது  பூச்சிநோய் அதிகம் தாக்கும். எனவே, விரிவாக்க அலுவலர்கள், கிராமங்களுக்குச் சென்று, பயிரினை கூர்ந்து ஆய்வு செய்து,  பூச்சி நோய் தாக்குதல் குறித்து உரிய அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

4. வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்தல்:

பருவ மழையினால் பாதிப்பு ஏற்படும் போது, போதுமான மண் தள்ளும் இயந்திரங்கள் (புல்டோசர்) ,  JCBகள், டிராக்டர் மற்றும் டிப்பிங் டிரைலர்கள் மற்றும் மரம் அறுக்கும் கருவிகளை வேளாண்மை பொறியியல் துறை  தயார் நிலையில் வைத்திருக்குமாறும், இது குறித்த விபரங்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார்கள்.

5 வெள்ளம் பாதிப்பின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

* அடிக்கடி வெள்ளப் பாதிப்பு ஏற்படும் கால்வாய்கள் பற்றிய விபரங்களை உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்குத் தெரிவித்து, பருவ மழை துவங்குமுன்பே தூர் வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் சூழ்ந்த வயல்களில் அதிகப்படியான நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

* வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேல் உரமாக தழைச்சத்தும்,  சாம்பல் சத்தும் 25 சதவீதம்  கூடுதலாக பரிந்துரைக்க வேண்டும்.

* தழைச்சத்து மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாட்டால் இலைகள் மஞ்சளாக காணப்பட்டால் இலைவழியாக உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அதிகப்படியாக வெளியேறும் மழைநீரினை பண்ணை குட்டைகள் / தாழ்வான பகுதிகளில் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அரசு அனுமதித்துள்ள நிதியினை பயன்படுத்தி, விவசாயிகளுக்குத் தேவையான தார்பாய்களை உடனடியாக கொள்முதல் செய்து, மானியத்தில் விநியோகம் செய்ய வேண்டும்.

* புயல் காலங்களில் தென்னந்தோப்புகளில் முதிர்ச்சியடைந்த தேங்காய், இளநீர்க்காய்களை புயல் தொடங்குவதற்கு முன்பே அறுவடை செய்வதற்கும், கீழ் சுற்றில்  உள்ள கனமான  ஓலைகளை வெட்டி அகற்றி மரத்தின் பாரத்தை குறைக்கவும், அடிப்பாகத்திற்கு  எந்த வித சேதமும் ஏற்படாமல் மண் அணைக்கவும் விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

6 பயிர்க் காப்பீடு: பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் 29 இலட்சம் ஏக்கரில் பதிவு செய்த 18.53 இலட்சம் விவசாயிகளுக்கு உத்தேச இழப்பீட்டு தொகை ரூ.481 கோடி அக்டோபர் முதல் வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு 2022-23 ஆம் ஆண்டில், 40 இலட்சம் ஏக்கரில் பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், 26 இலட்சம் விவசாயிகளை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய கிராம அளவில் போதுமான விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.

7 வடகிழக்கு பருவமழையின் காரணமாக பயிர் நிலைமையை கண்காணிக்க மாநில / மாவட்ட / வட்டார அளவில் குழுக்கள் அமைத்து, தினசரி பாதிப்பு நிலையை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும், கிராமங்களுக்கு தொடர்ந்து சென்று, விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, வேளாண் பெருமக்களுக்கு உறுதுணையாக களத்தில் பணியாற்ற வேண்டும் என்று மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்தக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப அவர்களும், வேளாண்மை இயக்குநர் திரு. அ.அண்ணாதுரை இ.ஆ.ப அவர்களும் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: