பாழடைந்த கட்டிடத்தில் இஎஸ்ஐ டிஸ்பென்சரி வேலூரில் நோயாளிகள் வேதனை

வேலூர்: வேலூரில் பாழடைந்த கட்டிடத்தில் போதிய இடவசதியின்றி இயங்கும் இஎஸ்ஐ டிஸ்பென்சரியை இடம் மாற்ற வேண்டும் என்று தொழிலாளர்களும், இஎஸ்ஐ டிஸ்பென்சரி டாக்டர்கள், பணியாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் வேலூரில் தலைமையிட இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, மேல்விஷாரம், வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி என 10 டிஸ்பென்சரிகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். வேலூர் டிஸ்பென்சரி கோட்டை சுற்றுச்சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் மிகப்பழமையானது என்பதுடன், மழைக்காலங்களில் நீர்க்கசிவுடன், பாசிபடர்ந்து சிதிலமடைந்துள்ளது.  

போதிய இடவசதியும் இல்லை. இதனால் தொழிலாளர்கள் இங்கு வந்து அச்சத்துடன் சிகிச்சை பெற்று செல்லும் நிலை உள்ளது. எனவே, வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் இயங்கி வரும் இஎஸ்ஐ டிஎஸ்பென்சரிக்கு மாற்று இடம் தேடும் பணியை இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. ஆனாலும், மாற்று இடம் கிடைப்பதில் இடர்பாடு நிலவுவதாக கூறும் இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் இப்பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு இஎஸ்ஐ டிஸ்பென்சரிக்கு மட்டுமின்றி, நிலை உயர்த்தப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கும் இடம் தேடி தர வேண்டும் என்று தொழிலாளர்களும், இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: