12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியருக்கு போலீஸ் வலை

வேதாரண்யம்: வேதாரண்யம் அரசு பள்ளியில் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிப்புலம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் அசோகன்(38). இவர் அப்பள்ளியில் படிக்கும் 11, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அப்பள்ளியை சேர்ந்த 12 மாணவிகள், கடந்த 21ம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர் குமாரிடம் புகார் செய்தனர். இந்த புகாரை கலெக்டர், எஸ்பி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் குமார் நேற்று அனுப்பி வைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிக்கு வந்து கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, விஏஓ ரவிக்குமார், சமுதாய நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது தவறு செய்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியர் அசோகன், கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் பெண் ஆசிரியர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையுடன் புகாரையும் சேர்த்து கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், கல்வி அலுவலர், எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியர் அசோகன், தனது செல்போனை எடுக்காத நிலையில், மாணவிகளின் புகார் குறித்து அவரிடம் விளக்க கடிதம் கேட்டு கடந்த 23ம் தேதி விரைவு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தெரிவித்தார். உடற்கல்வி ஆசிரியர் அசோகன், பள்ளி அருகில் டியூஷன் சென்டர் நடத்தி வந்துள்ளார். மாணவிகளை டியூஷன் வகுப்புக்கு அழைத்து அங்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்தும் கரியாப்பட்டினம் போலீசில் தலைமை ஆசிரியர் குமார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அசோகன் மீது வழக்கு பதிந்து தலைமறைவான அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: