×

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 2 மணி காத்திருந்து சாமி தரிசனம்..!

திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கும்பாபிஷேகம் முடிந்து மண்டலபூஜை நடைபெற்று வரும் நிலையில் சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 21ஆம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன்  கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்க முடியாதவர்கள் மண்டல பூஜை நடைபெறும் 48 நாட்களில் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. மண்டல பூஜை ஒருபுறம், செவ்வாய்க்கிழமை மறுபுறம் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் தற்போது அலைமோதுகிறது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்ட மக்களும் ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். இலவச தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும்,

அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வழக்கமாகவே செவ்வாய்க்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜையும் நடந்து வருவதால் பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

Tags : Siruvapuri Murugan Temple ,Sami Darshan , Crowd of devotees at Siruvapuri Murugan Temple: Wait for 2 hours for Sami Darshan..!
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு