பழ விவசாயத்தில் பல மடங்கு வருவாய் ஈட்டும் இளம் தம்பதியினர்!!

விவசாயம் என்பது சென்ற தலைமுறையினருக்கானது என்கிற தவறான புரிதலை உடைத்துள்ளனர் விருதுநகரை சேர்ந்த இளம் விவசாய தம்பதியினர் அமர்நாத் மற்றும் ஸ்நேகா.  மானாவாரி மாவட்டமான விருதுநகர் பகுதியில், நீர் வரத்து குறைந்த இடத்தில் புதிய உத்திகளை செயல்படுத்தி பலவிதமான பழமரங்களின் மூலம் பல மடங்கு வருவாயை பெருக்கியுள்ளனர். நரிக்குடி பகுதியில் 52 ஏக்கரில்  அமைந்துள்ளது அத்வைதா ஒருங்கிணைந்த பண்ணை. இளம் விவசாயிகளான இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரம் சார்ந்த விவசாயம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்ட திரு. அமர்நாத்திடம்,  விவசாயத்திற்கான ஆர்வம் எப்படி வந்தது என நாம் கேட்ட போது,   “நகரத்திலேயே வளர்ந்தவன் என்பதாலும் சொந்த ஊருக்கு செல்கிற போது விவசாயம் செய்வதை பார்த்து பெரும் தாக்கம் ஏற்பட்டதாலும், இந்த விவசாயத்தை நாமும் செய்ய வேண்டும், ஆனால் அதை லாபகரமாகவும் தொழில் நேர்த்தியோடும் செய்ய வேண்டும் “ என்கிற முடிவை அவர் எடுத்ததாக தெரிவித்தார்.

இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்கிற அவரின் ஆர்வத்திற்கு  உறுதுணையாக இருந்தவற்றை குறித்து கேட்ட போது  “ஈஷா காவேரி கூக்குரல் மூலம் சுபாஷ் பாலேக்கரின் மூன்று நாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். அதில் இயற்கை விவசாயம் குறித்த  சரியான வழிகாட்டுதல் எனக்கு கிடைத்தது ‘ என கூறினார். இவருடைய மனைவி திருமதி. ஸ்நேகா வெளிநாட்டில் பொறியியல் படித்திருந்தாலும் விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால் அவர் கணவரோடு சேர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். லாபகரமான விவசாயத்திற்கு என்ன மாதிரியான புதிய உத்திகளை கையாண்டீர்கள் என நாம் கேட்ட போது  “ஒவ்வொரு பயிருக்கும் பிரத்யேக மழை நீர் சேகரிப்பு முறையை பரிசோதனை முறையில் முயற்சித்து வெற்றி கண்டுள்ளோம்.

வறண்ட நிலத்தில் லாபம் ஈட்டும் பயிர்களை கண்டறிந்து பயிரிட்டுள்ளோம். குறிப்பாக டிராகன் பழம் நல்ல லாபத்தை வழங்குகிறது மேலும் மண் வளத்தை அதிகரிக்கிறது. இது தவிர இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் டிஜிட்டல் முறையில் சந்தைப்படுத்துகிறோம். மிக முக்கியமாக எந்த இடைத்தரகர்களும் இன்றி சில்லரையாகவும், மொத்த விற்பனையாளர்களுக்கும் நேரடியாக விற்கிறோம். வருங்காலத்தில் பழங்களை பழச்சாறு, ஜாம் போன்ற புதிய வடிவில் மதிப்பு கூட்டி விற்கும் எண்ணமும் உள்ளது “என்றார்.

இயற்கை விவசாயத்தின் மூலம் பழ மரங்கள், டிம்பர் மரங்கள் ஊடுபயிர் போன்ற பல பயிர் சாகுபடி செய்யப்படும் இந்த  ஒருங்கிணைந்த பண்ணையில், தேவையான அனைத்து இடுபொருள்களும் பண்ணைக்கு உள்ளேயே தயாரிக்கப்படுகின்றன. இதனால் இடுபொருளுக்கான தனிச் செலவு பெருமளவு குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார். மரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து சொல்லுங்கள் என கேட்ட போது  “நான் 8 – 9 வகையான பழ மரங்களையும், வரப்போரங்களில் பல டிம்பர் மரங்களையும் வளர்க்கிறேன். அனைத்தும் நீண்ட கால பயிர்கள், ஒவ்வொரு பயிரும் ஒவ்வொரு மாதிரியான லாபத்தை கொடுக்கும். உதாரணமாக, எந்த பழமரமாக இருந்தாலும் ஒரு ஏக்கரில் சராசரியாக ரூ. 2 – 3 லட்சம் வரை லாபம் பார்க்க முடியும்.

இதை காட்டிலும் அதிக லாபம் தரக்கூடிய டிராகன் பழம், அத்தி  போன்ற பழ வகைகளும் உண்டு. பயிருக்கு பயிர் லாபம் வேறுபடும் என்றாலும் முறையாக செய்கிற போது சரியான வருவாய் ஈட்ட முடியும் “ என்றார். வறண்ட நிலத்திலும் திரு.அமர்நாத் வெற்றிகரமாக விவசாயம் செய்வதை கண்டு பலரும், தங்களுக்கும் அத்தி, டிராகன்பழம் போன்ற மரங்களின் மரக்கன்றுகள் வேண்டும் என தொடர்ந்து கேட்டதால், தேவையை உணர்ந்து தரமான மரக்கன்றுகளை உருவாக்க தொடங்கியுள்ளனர்.  இம்மரக்கன்றுகளை இவர்களின் சொந்த நர்சரி மூலம் விநியோகின்றனர். மேலும் மரம் சார்ந்த விவசாய முறைகளை அறிந்து கொள்ள விரும்புகிற விவசாயிகள், இவர்கள் பின்பற்றும் விவசாய முறைகளை பார்வையிடவும், தெரிந்து கொள்ளவும் அனுமதிக்கின்றனர்.

இவர்களின் பண்ணை உருவாக்கத்தின் ஆரம்ப நாட்களில் ,  ஈஷா நாற்றுப்பண்ணையில் இருந்து சுமார் 10,000 மரக்கன்றுகளை பெற்றிருப்பதாக கூறும் இத்தம்பதியினர்,  “இயற்கை விவசாயம் இந்தியாவின் வருங்காலம். இந்த சமூகத்திற்கு நஞ்சில்லா உணவை வழங்குவது பெருமையளிக்கிறது “ என்றனர்.

 இவர் போன்ற பல விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதற்காக, காவேரி கூக்குரல் இயக்கம் 30க்கும் மேற்பட்ட ஈஷா நாற்றுப் பண்ணையில் 14 வகைக்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகளை வெறும் ரூ.3க்கு வழங்கி வருகிறது.

Related Stories: