அக்.2-ல் தமிழ்நாடு முழுவதும் சீருடை அணிவகுப்பு பெயரில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டம்: அனுமதியை திரும்ப பெறக்கோரி திருமாவளவன் வழக்கு

சென்னை : தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலத்துக்கு அளித்த அனுமதியை திரும்ப பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சீருடை அணிவகுப்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலம் நடத்த உள்ளது. இந்த ஊர்வலத்துக்கு நாளைக்குள் அனுமதி அளிக்க உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். இந்த அனுமதியை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை  உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.

அதில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரித்தாளும் கொள்கையை கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்தப்பட உள்ளதையும் திருமாவளவன் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிபதி இளந்திரையன் மறுத்து விட்டார். தேவையெனில் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என நீதிபதி அறிவுறுத்தினார். இதேபோல், பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிட்ட போதும் மேல்முறையீட்டு மனுவாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என மறுத்துவிட்டனர்.

Related Stories: