நான் காதலிக்கவில்லை... அவர்தான் காதலித்தார்... துணை நடிகை தற்கொலை செய்த வழக்கில் தயாரிப்பாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: முரண்பாடான பதிலால் குழப்பம்

அண்ணாநகர்: சென்னையில் நடிகை தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தயாரிப்பாளரும் இயக்குனருமான சிராஜூதீன் முரண்பட்ட தகவலை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெசிக்கா பவுலின்(எ) தீபா(29). இவர் சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில், பவுலின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சிராஜுதீன் என்பவரை காதலித்தார். இந்தநிலையில், கடந்த 17ம் தேதி நடிகை தனது வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த கடிதத்தில், “ஒரு நபரை உயிருக்கு உயிராக காதலித்துவந்த நிலையில், காதல் கைகூடாததால் தற்கொலை செய்துகொள்கிறேன். தனது சாவுக்கு யாரும் காரணமில்லை’’ என்று தெரிவித்திருந்தார். மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள் 16ம் தேதி நடிகை பவுலின் வெளியே சென்றுவிட்டு ஆட்டோவில் திரும்பி வந்து சோர்வாக வீட்டிற்கு நடந்து செல்வது மற்றும் நடிகை பவுலின் தற்கொலை செய்துகொண்ட பின் அவரது வீட்டுக்கு அவரது காதலன் சிராஜுதீனின், நண்பர் பிரபாகரன் வந்ததும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நடிகையின் காதலன் என்று கூறப்படும் தயாரிப்பாளரும் இயக்குனருமான சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீனிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். சுமார் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் அவற்றை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, நடிகை தனக்கு கடந்த 5 மாதமாகத்தான் தெரியும் என்றும்  தான் அவரை காதலிக்கவில்லை, ஆனால் அவர் தன்னை ஒருதலைப்பட்சமாக காதலித்துவந்தார் என்றும் தெரிவித்துள்ளார். நடிகைக்கு கை, கால்களில் தோல் தொடர்பான பிரச்சனை இருப்பதாகவும் அவரது தோழி பல் மருத்துவர் நித்தியா என்பவர் மூலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புகள் வரக்கூடிய நிலையில், இதுபோன்று பிரச்சனை இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டதாகவும் இதற்காக டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். நடிகையை காதலிக்கவில்லை என்றால் ஏன் ஐபோன் வாங்கி கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘ நான் ஐபோனை வாங்கி தரவில்லை. அது ஜெசிக்காவின் ஐபோன் தான் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் மூலமாக ஐபோனை எடுத்து வரசொன்னது ஏன் என்று கேட்டதற்கு மழுப்பலாக பதில் அளித்துள்ளார். நடிகை தற்கொலை செய்துகொண்டதை அறிந்து முதன்முதலில் அவரது வீட்டிற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றவரும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தவருமான சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது நடிகை பவுலின் மற்றும் சிராஜுதீன் காதலித்து வந்ததாகவும் நடிகை தற்கொலை தொடர்பாக சிராஜுதீன் தெரிவித்த தகவலின் அடிப்படையில்தான் பவுலின் வீட்டிற்கு தான் வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சிராஜூதீன் காதலியான பவுலினுக்கு ஐபோன் வாங்கி கொடுத்ததாகவும் பின்னர் சிராஜூதின் மற்றும் பவுலின் இடையே ஏற்பட்ட மோதலின் போது, பவுலினிடம் இருந்த  ஐபோனை சிராஜூதின் பெற்று வருமாறு கூறியதால் சில நாட்களுக்கு முன்பே தான் பெற்று வந்ததாக தெரிவித்து இருந்தார். எனவே, தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும்  பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுக்கு பிறகு செல்போன்கள் மற்றும் லேப்டாப்புகளை சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பபட்ட நிலையில் அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனிடையே நடிகை வழக்கு சம்பந்தமாக தயாரிப்பாளரும் இயக்குனருமான சிராஜூதீன் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை தெரிவித்துவருவதால் உண்மையை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: