×

புதுவையில் என்ஆர்.காங்-பாஜ மோதல் முற்றுகிறது: எம்எல்ஏக்கள் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் பரபரப்பு

புதுச்சேரி: புதுவையில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேச்சை அங்காளன் போராட்டம் நடத்திய நிலையில் அவருக்கு எதிராக என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  இருகட்சிகளுக்கு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனிடையே டெல்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம் புதுச்சேரி திரும்பியதும் அவரை கூட்டாக சந்திக்க என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜ கூட்டணி ஆட்சி உள்ளது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார். இதில் என்.ஆர். காங்கிரசுக்கு 10 எம்எல்ஏக்கள் இருந்தாலும், பாஜகவுக்கும் சட்டசபையில் ேதர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள், 3 நியமன எம்எல்ஏக்கள் என மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இருகட்சிகளும் சம பலத்துடன் உள்ள நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக தேஜ கூட்டணி ஆட்சி சுமூகமாக நடைபெற்று வருகின்றது.

இதனிடையே திருபுவனை தொகுதி பாஜக ஆதரவு சுயேச்சை அங்காளன் கடந்த 23ம்தேதி சட்டசபை வளாகத்தில் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு காலாப்பட்டு தொகுதி பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் நேரில் ஆதரவு தெரிவித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கினர். அதிலும் பாஜக முதல்வர் வேண்டுமென சுயேச்சை அங்காளன், சபாநாயகரை சந்தித்து பகிரங்கமாக வலியுறுத்தினார். இருப்பினும் அவரது தொகுதி பிரச்னைகள் இதுவரை நிறைவேறாத நிலையில் அங்காளன் பதவி விலக வேண்டுமென திருபுவனை தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே ஆதாரமின்றி முதல்வர் மீது குற்றம் சாட்டிய பாஜக, ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுதொடர்பாக அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ், பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், காரைக்கால் திருமுருகன் உள்பட 5 எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமியை நேற்று சட்டசபையில் சந்தித்து வலியுறுத்தினர். இதில் அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அப்போது சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அங்காளன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதற்கு ரங்கசாமி, அமைதி காக்குமாறு கூறிய நிலையில் முதல்வரை சந்தித்த பிறகு வெளியே வந்த என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறும்போது, முதல்வர் மீது சுயேச்சை எம்எல்ஏ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது, அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தோம். இதற்கு முதல்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றனர்.

மேலும் 4 முறை முதல்வராக இருந்த ரங்கசாமி மீது ஆதாரமில்லாமல் பேசுவது தவறு என ஆதங்கப்பட்ட என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கூட்டணி உறவு குறித்து சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலையில் பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு சுயேச்சைகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் முதல்வரை அவதூறாக பேசுவது குறித்து கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பப்படும். கூட்டணி தர்மத்தை மீறி பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வலியுறுத்துவோம் என்றனர். இதில் நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் இடையே விரிசல் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

என்ஆர் காங்கிரஸ், பாஜக இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம் இன்று புதுச்சேரி திரும்புகிறார். அவரை என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். அப்போது அங்காளன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவர் என்று தெரிகிறது. அவர்களின் கோரிக்கை மீது எடுக்கப்படும் நடவடிக்கை பொறுத்தே தங்களது அடுத்தகட்ட நகர்வுகளை திட்டமிட என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டாக முடிவு செய்துள்ளனர்.

Tags : Kang-Baja ,MLA , NR Cong-Bajja clash ends in Puduvai: MLAs are in a frenzy over mutual accusations
× RELATED மக்கள் சாரைசாரையாக வந்து இந்தியா...