மதுபோதையில் தினமும் தகராறு: கடப்பாரையால் கணவனை அடித்து கொன்ற மனைவி

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீராளன்(38), ரேடியோ சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா(30). இவர்களுக்கு தின்ஷா(10) என்ற மகளும், சஷ்வந்த்(8) என்ற மகனும் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 மற்றும் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இன்று அதிகாலை சீராளன் தனது வீட்டின் வாசலில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தக்கோலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சீராளனின் தலை பகுதியில் பலத்த காயம் இருந்தது.

யாரோ இவரை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே சீராளனின் மனைவி ஷோபனா, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல்நிலையத்திற்கு சென்று, தனது கணவரை குடும்ப பிரச்னை காரணமாக கடப்பாரையால் அடித்தும், கட்டுக்கல்லை போட்டும் கொலை செய்துவிட்டேன் எனக்கூறி சரணடைந்தார். இதுதொடர்பாக மப்பேடு போலீசார் தக்கோலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தக்கோலம் போலீசார், மப்பேடு சென்று ஷோபனாவை கைது செய்து விசாரித்தனர். அதில், சீராளன் சரிவர வீட்டிற்கு வருவதில்லை. குடும்பம் நடத்த பணம் தருவதில்லையாம். மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து மனைவியை துன்புறுத்துவாராம்.

அதேபோல் நேற்றிரவு சீராளன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நள்ளிரவு வரை இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷோபனா அருகில் இருந்த கடப்பாரையால், சீராளனின் தலையில் அடித்தாராம். மேலும் வீட்டிற்கு வெளியே இருந்த கட்டுக்கல்லை எடுத்து கணவரின் தலை மீது போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், சீராளனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தக்ேகாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவரை, மனைவியே கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: