நாகையில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க சென்றபோது சோகம்: ரூ.1 கோடி மதிப்பிலான படகு மூழ்கியதால் இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை

நாகப்பட்டினம் : நாகையில் நடுக்கடலில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான விசை படகு மூழ்கியது. மீட்கப்பட்டு காயங்களுடன் கரைக்கு வந்த மீனவர்களை பார்த்து நூறுகணக்கான மீனவ பெண்கள் கதறி அழுதனர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 13 மீனவர்கள் 24-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். என்ஜின் கோளாறு காரணமாக நேற்று நள்ளிரவு அந்த விசைப்படகு பழுதாகி 13 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். தகவல் அறிந்த அக்கரைபேட்டையை சேர்ந்த அருண் தனக்கு சொந்தமான விசைப்படகில் சில மீனவர்களை அழைத்து கொண்டு அவர்களை மீட்பதற்கு சென்றுள்ளன. அப்போது அருணின் விசைப்படகில் திடீரென விழுந்த ஓட்டையின் காரணமாக படகினுள் கடல்நீர் புகுந்தது.

இதனால், ஒருகோடி ரூபாய் மதிப்பிலான விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது. காயமடைந்து கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மற்றும் ஏற்கனவே படகு பழுதாகி தவித்த 13 மீனவர்களையும் சகமீனவர்கள் மீட்டனர். படகை இழந்து இரவில் நாகை துறைமுகம் வந்த மீனவர்களை கண்ட உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனிடையே கடலில் மூழ்கிய படகுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வட்டிக்கு கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து கட்டப்பட்ட விசைப்படகு மூழ்கியதால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருவதாக சம்மந்தப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர். படகு மூழ்கியதால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் கதறியது காண்போரையெல்லாம் கண்கலங்க வைத்தது.

Related Stories: