ஆற்காடு, அரக்கோணத்தில் நடந்த சோதனையில் சிக்கியது வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 3,349 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஆற்காடு : ஆற்காடு, அரக்கோணத்தில் வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 3,349 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள், போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு வீட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைத்திருப்பதாக ஆற்காடு வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு நேற்று  ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா தலைமையில், வருவாய் ஆய்வாளர் மாதவன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட பாழடைந்த வீட்டில் சோதனை செய்தனர். அதில், 9 மூட்டைகளில் 849 கிலோ ரேஷன் அரிசி, வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வாலாஜா  நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள்  யார்? என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதபோல் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் தலைமையில் பாதுகாப்பு படையினர் கடந்த 2 நாட்களாக அரக்கோணம், திருத்தணி, அன்வர்திகான்பேட்டை, பாணாவரம் (சோளிங்கபுரம்) ஆகிய ரயில் நிலையங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியாக செல்லும் ரயில்களில் ஏற்றி வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக, ரேஷன் அரிசி மூட்டைகள் பிளாட்பாரத்தில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்படி, 86 ரேஷன் அரிசி மூட்டைகள் 2,500 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்தனர்.

பின்னர், அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரியிடம் நேற்று ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். மேலும், இந்த ரேஷன் அரிசியை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: