குடிபோதையில் மயங்கி விழுந்து மருமகன் சாவு மனைவி, 3 மகள்களுடன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி-மருத்துவமனையில் தீவிர சிகிச்சை; ஆரணி அருகே சோகம்

ஆரணி : ஆரணி அருகே குடிபோதையில் மயங்கி விழுந்து மருமகன் இறந்ததால், மனைவி, 3 மகள்களுடன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அகரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன்(52), கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(48). இவர்களது மகள்கள் சரோஜினி(28), ஜெயந்தி(24), லட்சுமி(26).

இதில் மகள் சரோஜினிக்கு, ஆரணி அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்த தனியார் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த தினகரன்(32), என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தொடர்ந்து சரோஜினி, கணவர் தினகரனுடன் சென்னையில் வசிக்க தொடங்கினார். தற்போது சரோஜினி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி கணவருடன் ஏற்பட்ட தகராறில், சரோஜினி அகராப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு வந்துவிட்டார்.  இதைத்தொடர்ந்து தினகரன் துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக தினகரன் குடும்ப தகராறில் அதிகளவு மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த அர்ஜூனன் குடும்பத்தினர் யாரும் தினகரனின் வீட்டிற்கு செல்லவில்லையாம். மேலும் மருமகன் இறந்த மனவேதனையில் இருந்த அர்ஜூனன், அவரது மனைவி லட்சுமி மற்றும் 3 மகள்களுடன் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து நேற்று காலை வீட்டில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் மீட்டு, அகரப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: