காட்பாடியில் விடிய விடிய சோதனை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்-கர்நாடக வாலிபர் கைது

வேலூர் : காட்பாடி ரயில் நிலையத்தில் விடிய விடிய ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில், எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்த முயன்ற 4 கிலோ கஞ்சாவுடன் கர்நாடக வாலிபரை கைது செய்தனர்.ரயில்வே எஸ்பி உமா உத்தரவின்பேரில் சேலம் உட்கோட்ட ரயில்வே டிஎஸ்பி யாஸ்மின் அறிவுறுத்தலின் பேரில் காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் ரயில்வே போலீஸ் எஸ்எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் முத்துவேல் நரேந்திரகுமார், அருண்குமார், சதானந்தம் கொண்ட குழுவினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 12.30 மணியளவில் பிளாட்பாரம் எண் 4ல் வந்து நின்ற ஹட்டியா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்ட போது, பயணிகள் பொதுபெட்டியில் லக்கேஜ் வைக்கும் ரேக்கில் கருப்பு பையில் 4 பண்டல்களில் சுமார் 4 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். தொடர்ந்து அதன் அருகே உட்கார்ந்திருந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரது பெயர் மகேஷ்(28) என்பதும், கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் கஞ்சாவை அவரே பையில் எடுத்து வந்ததும், கஞ்சாவை ஒடிசா மாநிலம் கேசிங்காவில் இருந்து வாங்கி, கர்நாடக மாநிலம் பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்துக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவுடன் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

காட்பாடி தாலுகா, திருவலம் அருகே சென்னை- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சேர்க்காடு கூட்ரோடு பஸ் நிறுத்தத்தில் திருவலம் எஸ்ஐக்கள் ஏழுமலை, மனோகரன்  மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ்சில் சோதனை நடத்தினர். இதில் சந்தேகப்படும்படியாக அமர்ந்திருந்த இருவரை போலீசார் சோதனையிட்டனர். அதில் இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து தலா 2 கிலோ வீதம் 4 கிலோ   கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், நெடுங்கால் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(61), பாளையம்  கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(55) என்பதும்,  ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, காட்பாடி சப்-கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: